'நான் நக்சலைட் அல்ல... மனித துன்பங்களை தாங்க மாட்டேன்!' - ஆயுள் தண்டனை பெற்ற மக்கள் டாக்டர் பினாயக் சென்!
பினாயக் சென்... இவர் ஒரு மருத்துவர். சத்தீஸ்கர் மாநிலத்தில் வறுமையில் வாடும் ஏழை எளிய மக்களுக்கு இலவசமாக மருத்துவம் பார்த்து வந்தார். அந்த நல்ல காரியத்தை செய்து வந்தபோது அவரைப் பலருக்கும் தெரியவில்லை. மனித உரிமைப் போராளியாக மாறி, சில கருத்துகளைச் சொன்ன போது இந்தியா முழுமைக்கும் அறிமுகம் ஆனார். இப்படிப் பட்டவரை சும்மா விடுவார்களா? 'நக்சல்' என்று குற்றம் சாட்டி சிறையில் அடைத்த அரசு, இப்போது ஆயுள் தண்டனையும் பெற்றுக் கொடுத்திருக்கிறது!
'உலகளாவிய சுகாதாரம் மற்றும் மனித உரிமைகளுக்கான ஜொனாதன் மன் விருது பெற்ற முதல் இந்தியர்' என்பதைவிட, 'தெற்காசியாவில் இந்த விருதை வென்ற முதல் வெற்றியாளர்' என்பதுதான் பினாயக் சென்னின் கூடுதல் சிறப்பு. சத்தீஸ்கர் மாநில மக்களின் சுகாதார மற்றும் ஊட்டச் சத்து நிலையைக் கண்காணித்து நல்லதொரு ஆரோக்கிய அறிவுரையை வழங்கியது மட்டுமல்லாமல், பழங்குடி மற்றும் வறுமையில் வாழும் நபர்கள் மீதான தாக்குதல் களைத் தடுத்து மனித உரிமைப் போராளியாகவும் தன்னை உருவாக்கிக்கொண்டார்.
வட கிழக்கு மாநிலங்கள் மாவோயிஸ்ட்களின் கட்டுப்பாட்டில் பெரும்பாலும் இருக்கின்றன. பழங்குடி மக்களில் ஒரு குறிப்பிட்ட அணியை உருவாக்கி அவர்களுக்கு ஆயுதப் பயிற்சி கொடுத்து, மாவோயிஸ்ட்களுடன் மோத விட்டது சத்தீஸ்கர் அரசாங்கம். இந்தக் குழுவுக்கு 'சல்வா ஜுடும்' என்று பெயர். இந்த குரூப் பல்வேறு கொடுமைகளைச் செய்ததாக மனித உரிமையாளர்கள் புகார் சொன்னார்கள்.
அபரிமிதமாக இருக்கும் இயற்கை வளங்களை சத்தீஸ்கர் அரசு, பன்னாட்டு நிறுவனங் களுக்குக் கூறுபோட்டு விற்பதைத்தான் நாங்கள் எதிர்க்கி றோம் என்று மாவோயிஸ்ட்கள் சொன்னார்கள். அதன் முக்கியமான ஒரு தலைவர்தான் நாராயண் சான்யால். அவருக்குப் பொருளாதாரரீதியாக உதவியவர் பிஜுஷ் குஹா என்பவர். நாராயண் காட்டுக்குள் இருந்து போராட... குஹா கருத்தியல்ரீதியாக வெளியில் இருந்து அவருக்கு உதவினார்.
இந்த நாராயண் மீது நல்ல அபிப்ராயம்கொண்டவராக டாக்டர் பினாயக் சென் இருந்தார். சத்தீஸ்கர் மாநிலப் பழங்குடி மக்களுக்கு மருத்துவம் மற்றும் சட்ட ஆலோசனைகளைத் தந்து வந்ததால், நாராயணனுடன் நெருக்கமாக இருந்தார்.
நாராயண் சான்யால், அம்மாநில அரசால் கைது செய்யப்பட்டபோது, சிறையில் சென்று சிகிச்சை அளித்த மருத்துவர்தான் இந்த பினாயக் சென். 'மருத்துவம் பார்க்க சிறைக்குள் வந்த பினாயக் சென், வெளியே என்ன நடக்கிறது என்ற தகவலை எடுத்து வந்து நாராயண் சான்யாலுக்கு சொன்னார். மாவோயிஸ்ட் இயக்க நடவடிக்கைகளை விவரித்தார்.
அப்போது சில கடிதங்களை பினாயக் சென்னிடம் நாராயண் கொடுத்தார். அதை அவர் வாங்கிச் சென்று பிஜுஷ் குஹாவிடம் தந்தார்...' என்றெல்லாம் குற்றம் சாட்டப்பட்டு 2007-ம் ஆண்டு மே 14-ம் தேதி, 'சட்டத்துக்குப் புறம்பான நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம்' மற்றும் 'சத்தீஸ்கர் சிறப்பு மக்கள் பாதுகாப்புச் சட்டம்' ஆகியவற்றின் கீழ் பினாயக் சென் கைதானார்.
'மாநிலத்தின் அமைதிக்கு அச்சுறுத்தலாக இருப்பவர்' என்று இவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. சட்டத்துக்குப் புறம்பான இந்தக் கைதில் இருந்து பினாயக்கை விடுதலை செய்யுமாறு சுப்ரீம் கோர்ட்டில் மனுத் தாக்கல் செய்யப்பட்டது. அவர்கள் சத்தீஸ்கர் அரசுக்கு நோட்டீஸ் அனுப்பினார்கள். 'நக்சல்களுடன் தொடர்புடையவர் இவர்' என்று அரசு சார்பில் பதில் அனுப்பியது. இதைத் தொடர்ந்து இரண்டு மாதங்கள் தனிமைச் சிறையிலும் சென் அடைக்கப்பட்டார்.
இந்தக் குற்றச்சாட்டின் அடிப்படையில் அவரது வீட்டில் பல முறை சோதனைகள் செய்தும் வலுவான ஆவணங்களோ, சாட்சியங்களோ அரசுக்குச் சிக்கவில்லை... அதனால் வீட்டில் இருந்த கம்யூனிஸ புத்தகங்கள் மற்றும் சில கடிதங் களை மட்டுமே ஆதாரமாக வைத்திருக்கிறார்கள்என்றே மனித உரிமை ஆர்வலர்கள் சொல்லி வந்தார்கள். இந்நிலையில் அவர் மீதான வழக்கின் விசாரணை கடந்த வாரத்தில் முடிந்தது. குற்றம் நிரூபிக்கப்பட்டு அவருக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது.
'அரசுத் தரப்பு அவருக்கு எதிராக வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்து, ஆயுள் தண்டனை கொடுத்தது தவறு. மாபெரும் அநீதி' என்று நோபல் பரிசு பெற்ற நோம் சாம்ஸ்கி போன்ற அறிவுஜீவிகளும் அருந்ததி ராய் போன்ற மனித உரிமைப் போராளிகளும் கூறி வருகின்றனர்.
"ஒரு தனி நபரால் நாட்டில் வன்முறை போன்ற அசம்பாவிதங்கள் நடந்து, அது நிரூபிக்கப்பட்டால் மட்டுமே... அரசாங்கத்துக்கு எதிராக இயங்கினார் என்ற பிரிவில் தண்டனை தர முடியும். ஆனால், பினாயக் விஷயத்தில் அப்படி ஏதுமே இல்லை!" என்கிறார், உச்ச நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன்.
"லட்சக்கணக்கான மக்கள் செத்துப்போன போபால் வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு இரண்டு வருட சிறை. ஆனால், தன் வாழ்நாளின் பெரும்பகுதியை மக்களின் நலனுக்குச் செலவிட்டவருக்கு ஆயுள் தண்டனையா?" என்று கொந்தளித்து இருக்கிறார் அருந்ததி ராய்.
நீதிமன்றம் கேட்கும் கேள்விகளுக்கு எல்லாம் பினாயக் சென் தருகிற பதில் இதுதான்... "நான் நக்சல்களை ஆதரிக்கவில்லை. ஆனால், மனித உரிமைகளுக்காகப் போராடுகிறேன்! ஒரு மனிதன் துன்பப்படுவதை என்னால் பொறுத்துக்கொள்ள இயலாது!" என்பது மட்டுமே.
பினாயக் சென் மீதான ஆயுள் தண்டனை தீர்ப்பை மறுபரிசீலனை செய்து, அவரை விடுவிக்கவேண்டும் என்பதே உலகம் முழுதும் உள்ள மனிதநேய ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு!
ஜூனியர் விகடன் 02-ஜனவரி-2011
=====
Sign the Petition
No comments:
Post a Comment