Sunday, November 8, 2009
பேராண்மை: சமூகநீதியின் வெற்றி!
தமிழ் அல்லது இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை காடுகளும் மலைகளும், மலை சார்ந்த பகுதியும் ஒன்று நாயகன் நாயகி காதல் காட்சிக்குப் பயன்படும் அல்லது, திகில் காட்சி, சண்டைக் காட்சிகளுக்குப் பயன்படும். அவ்வாறே, மலைவாசி பூர்வகுடி மக்கள் என்போர் "ஜும்பாலே.. ஜும்பாலே.." பாடியபடி நடனமாடி நாயகன் நாயகிக்கு மாலை சூடவோ, அல்லது நகைப்புக்குரிய மனிதர்களாக காட்டவோ பயன்படுவர்.
பேராண்மை' படமும், காட்டையும், காட்டு மக்களையும் சுற்றித்தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழ்ப் படங்கள் காணாத நாயகன், காணாத இடங்கள் என ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிற்கிறது படம். திரைத் தொழில்நுட்பமும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சமூக அக்கறையும் கொண்ட 'மக்கள் இயக்குநர்' ஜனநாதனின் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் 'பேராண்மை'.
என்.சி.சி. பயிற்சிக்காக மலைப்பகுதிக்கு வருகிறார்கள் கல்லூரி மாணவிகள். அவர்களின் பேராசிரியராக ஊர்வசி. அக்காட்டுப் பகுதிக்கு ரேஞ்சராக கணபதி ராம் என்ற கதாபாத்திரத்தில் பொன்வண்ணன். 2000 ஏக்கர் காட்டுக்கு பொறுப்பாளராகவும், மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மலைவாழ் சமூகத்திலிருந்து படித்து முன்னேறி பதவிக்கு வந்திருக்கும் இளைஞர் துருவனாக ஜெயம் ரவி. அலுவலகப் பணியாளராக வடிவேலு.
மாணவிகள் பயிற்சிக்கு வரும் வழியில், மலை வாழ் மக்களுடன், கோவணம் தரித்தபடி எருமை மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் துருவனைப் பார்க்கிறார்கள். பின்னர் அவரே தங்களுக்கு பயிற்சியாளராக வருவது கண்டு 'இந்தக் காட்டுவாசியா நமக்கு கற்றுத் தருவது? ரிசர்வேசன் கோட்டாவில படிச்சுட்டு வந்த இவனுக்கு என்ன தெரியும்?' என்று வெறுப்புக் கொள்கிறார்கள் அதில் சில மாணவிகள்.
எப்படியேனும் துருவனை தங்களுக்கு பயிற்சியளிப்பதில் இருந்து மாற்றிவிட வேண்டும்' என்று அய்ந்து மாணவிகள் புகார் அளிக்கவும், பழி சுமத்தவும் செய்கிறார்கள். ஏற்கெனவே துருவனின் மீது ஜாதி ரீதியாக வெறுப்பும் ஏளனமும் கொண்டிருக்கும் கணபதிராம் அதனைப் பயன்படுத்தி துருவனை மட்டம் தட்டவும், தண்டனை வழங்கவும் முன்வருகிறார். எதையும் பொறுமையுடன் சமாளிக்கும் துருவன், முதல் கட்டப் பயிற்சி முடித்து காட்டுக்குள் செல்லும் பயிற்சிக்காக மாணவிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, சரியாகப் பயிற்சி எடுக்காத அந்த அய்ந்து மாணவிகளுக்குத் தான் பயிற்சி தேவை என்று அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்.
அதே வேளையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இயற்கை வேளாண்மைக்கு உதவுவதற்காக பசுமை -1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த இருக்கிறது. இயல்பாகவே குறும்புத் தனமும், துருவன் மேல் அசூயையும் கொண்டுள்ள மாணவிகள் (துருவன் மீது நேசப் பார்வை வீசும் அஜிதா தவிர), துருவனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட்டதில், வந்த வாகனத்தையும் இழந்து, மாலையே பயிற்சியகத்திற்கு திரும்ப முடியாதபடி நடுக்காட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். அவ்விரவில், மனித நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில், இரண்டு வெள்ளைக்காரர்கள் உலாவுவதைப் பார்க்கும் ஒரு மாணவி அதுகுறித்து துருவனிடம் சொல்ல, அவர்கள் இருவரல்ல... 16 பேர் இருப்பதைக் காண்கிறார்கள். அவர்களின் திட்டம் ராக்கெட் ஏவுவதைத் தடுப்பதாக இருக்கும் என்பதை ஊகிக்கும் துருவன், மாணவிகள் அய்வரின் துணையுடன் அதை முறியடிக்கத் துணிகிறார்.
உடனடித் தொடர்போ, தகவலோ இன்றி, காட்டுக்குள் சென்ற துருவனும் மாணவியரும் திரும்பி வராததால், துருவன் மீது புகாரை வலிந்து பெற்றுக் கொண்டு, படையுடன் காட்டுக்குள் நுழைகிறார் கணபதிராம். மழைவாழ் மக்களின் இருப்பிடத்திலிருந்து அவர்களை விரட்டியும், தகவல் சொல்ல வந்து சேற்றில் சிக்கி இறந்து போன மாணவி அஜிதாவின் பிணத்தைக் காட்டி, துருவனை சுடுவதற்கு அனுமதி வாங்கியும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.
மறுபுறம் நான்கு மாணவிகளுடன் தன்னால் இயன்ற அளவு, சர்வதேச கூலிப் படையின் சதியைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் துருவன். இரண்டு மாணவிகளின் உயிரைப் பலி கொடுத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக துருவன் உள்ளிட்டோர் போரிடுகிறார்கள்; முடிவில் அவர்கள் முயற்சி வெற்றிபெறுகிறது.
கணபதிராம் வீரதீரச் செயல்களுக்கான விருது பெறுகிறார். அடுத்த கல்லூரி மாணவிகளின் பயிற்சியைத் தொடங்குகிறார் துருவன்.
ஒரு வேளை இந்தக் கரு விஜயகாந்த் கையிலோ, மற்ற இயக்குநர்கள் கையிலோ கிடைத்திருந்தால், சர்வதேச கூலிப்படை- பாகிஸ்தான் சதியாகியிருக்கும். நாயகன் மீதான வெறுப்பு கல்வி அறிவற்ற ஏழை என்ற அளவில் மொன்னையாக காட்டப்பட்டிருக்கும். நாயகிகளின் கனவுப் பாட்டு இரண்டு மூன்றாவது இருந்திருக்கும். அய்யய்யோ... இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்குமோ நினைக்கவே பயமாக இருக்கிறது.
சரி, ஒரு திரைப்படம் என்ற அளவில், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களின் பணியும் வியக்க வைக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என்று அனைவரும் வாயில் படம் எடுத்துக் கொண்டிருக்க, உண்மையில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான வியத்தகு காட்சிகளோடு, அதை சத்தமில்லாமல் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.
பொத்தாம் பொதுவான பார்வையில்லை. எல்லா ஆயுதத்தையும், எதற்கென்றே தெரியா மல் பயன்படுத்தும் படங்கள் மத்தியில், ஒவ்வொரு ஆயுதத்தையும் எதற்கு இது, எப்படிப் பயன்படுத்துவது என்பது வரை சொல்லிக் காட்டுவது ஒன்றே மற்றவற்றிலிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டிவிடும்.
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? நிச்சயம் இருக்கிறது.
உயிரியல் ஆயுதங்களைப் பரிசோதிக்கும் கூடமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஈ' படத்தில் சொன்னது போல, வளரும் நாடுகளை ஒழிக்க நினைக்கும் சர்வதேச முதலாளித்துவத்தை உரித்துக் காட்டும் சர்வதேச அரசியல் குறித்த சிந்தனை இருக்கிறது இந்தப் படத்தில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இருக்கிறது இந்தப்படத்தில். ஆம். இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு வாழ்ந்துவரும் மலைவாழ் மக்கள் மீது, மண்ணின் மைந்தர்கள் மீது வந்தேறிகள் நடத்தும் வன்முறை பதிவாகியிருக்கிறது இந்தப் படத்தில்!
அடக்கி வைக்கப்பட்ட அறிவை வெளிக்கொண்டு வந்தாலும், அதன் மீது தங்கள் அதிகாரத்தைப் பாய்ச்சி நசுக்க நினைக்கும் அதிகார மனநோயாளிகளின் ஆரிய சர்வாதிகாரத்தின் உண்மை முகம் வெளிச்சமிடப்படுகிறது இந்தப் படத்தில்!
உழைப்பைச் சுரண்டிச் சுரண்டியே உயர்ந்து வந்த உலுத்தர்களின் அடையாளம் காட்டப்படுகிறது இந்தப் படத்தில்!
"செருப்புத் தைக்கிறவன் பிள்ளை செருப்பு தான் தைக்கணுமா? மலம் எடுக்கிறவன் பிள்ளை மலம்தான் எடுக்கணுமா? நாங்கள் லாம் படிச்சு அதிகாரியா வரக்கூடாதா?" என்று காலம் காலமாய் தேங்கி நிற்கும் கேள்வி உரத்து கேட்கப்படுகிறது இந்தப் படத்தில்!
ஒரு படத்தில் இத்தனையுமா? ஆம்.. இருக்கிறது... இன்னும் இருக்கிறது!
காரணம்... இதையெல்லாம் சொல்லத் தெரியும் என்பதையும், பன்னீர் செல்வம்' என்று பெயரிட்டு கறுப்பான ஆளைக்காட்டி லஞ்சப் பேர்வழி யாகவும், அங்கவை, சங்கவை என்று கறுப்பான மகளிரை நகைப்பிற்கிடமாகவும் காட்டும் அரசியல் சுஜாதாக்களுக்கு தெரியுமென்றால்...
கறுப்புச் சட்டை அணிவித்து ரவுடி அரசியல்வாதி என்று பாரதிராஜாவை நடிக்க வைக்கும் அரசியல் மணிரத்னங்களுக்கு தெரியுமென்றால்... அதே வழியில் 'டாக்டர் ராம கிருஷ்ணன்' என்று பன்னாட்டு மக்கள் விரோத அறிவியல் ரவுடிகளையும், 'கணபதி ராம்' என்று ஜாதி வெறியர்களையும் அடையாளம் காட்டும் அரசியல் எங்களுக்கும் தெரியும் என்று புரிய வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்!
"அகமும் புறமும் வென்றவன்' - இது தான் பேராண்மைக்கு ஜனநாதன் தந்த விளக்கம்" என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார். அப்படி ஒரு பாத்திரப் படைப்புதான் துருவன். 'நிர்வாணமாய் வரச் சொன்னான்' என்று திட்டமிட்டு குற்றம் சாட்டி, தண்டனை பெற்றுத் தரும்போதும் பொறுமை காத்து, தண்டனையை ஏற்றுக் கொள்ளும் துருவன், பின்னொரு கணத்தில் சொல்வார், "எங்க மக்களுக்கு தலைப்பிரசவம் பார்க்கிறதுக்கு என்னைதான் கூப்பிடுவாங்க.. என்னுடைய பார்வையில் நிர்வாணம்கிறதே வேற".
"அய்ந்து பெண்களை தனியாய் ஒரு ஆணுடன் அனுப்பும்போது நம்பிக்கையாய் அனுப்ப துருவனை விட்டால் யார் இருக்கிறார்" என்று கல்லூரிப் பேராசிரியையின் நம்பிக்கையும், துருவனை 'ரேப்பிஸ்ட்'டாக சித்தரிக்க முயலும் கணபதிராமிடம் "கற்பழிப்புங்கிறதே எங்க இனத்தில கிடையாது சார்" என்று பதறும் வடிவேலுவின் தவிப்பும் அகத்தை வென்ற துருவனின் பேராண்மையைப் படம் பிடிக்கின்றன.
மாணவிகளின் குறும்புத் தனத்தைக் காட்டவும், இன்றைய இளைய தலைமுறை யின் போக்கைக் காட்டவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. பொறுத்துக் கொள்ள முடியவில்லை; தவிர்த்திருக்கலாம்.
மலைவாழ் மக்கள் மீதுதான் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மை. பூர்வகுடி மக்களை, அவர்களின் மண்ணிலிருந்து விரட்ட அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு காட்சியில் உணர்த்தி விடுகிறார். துருவன் மீது பழிபோட்டு, அவனைத் தேடுகிறோம் என்று பழங்குடி மக்களை ஊரைக் காலி செய்யச் சொல்லும்போது அதிகாரம் நிகழ்த்துகிற வன்முறை கோபத்தையும், கண்ணீரையும் ஒருங்கே வரவழைக்கிறது. 'நீங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டா நாங்க என்னடா பண்றது?' என்று புத்தகங்களைத் தூக்கிப் போட்டு எரிக்கும்போது பார்ப்பனீயத்தின் விஷ நாக்குகள் எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பது புரியும்.
"படிக்கலைன்னா தான் அடிப்பாங்க... இவங்க படிச்சா அடிக்கிறாங்க" என்றபடி கரும்பலகையைக் காப்பாற்றும் குழந்தைகளின் வசனம், ஏதோ சாதாரணமானதல்ல... முதல் தலைமுறையார் படிக்க ஆவல் கொண்டு பள்ளிக்குப் போன ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனக் குழந்தையும் அனுபவித்த கொடுமை யின் வெளிப்பாடு. அத்தனை வன்முறையையும் நிகழ்த்திவிட்டு, "இப்போ தெரியுதாடா 'அரசு, அரசாங்கம், அதிகாரம்'ன்னா என்னன்னு?" என்று கொக்கரிக்கும்போதும், ஜாதியை வைத்து இழிவு செய்யும் போதும், துருவனின் வெற்றியத் திருடி கணபதிராம் விருது வாங்கும்போதும் திரையரங்கில் மக்களின் கோபத்தின் வெப்பத்தை உணர முடிகிறது. ஆங்காங்கே விளையாடியிருக்கும் சென்சாரின் கத்திரிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணத்தை பெட்டிச் செய்தியில் காண்க.
ஒவ்வொரு காட்சியிலும், ஏதாவதொன்றச் சொல்லிவிடும் தவிப்பு இருக்கிறது இயக்குநரிடம். ஆனால் பிரச்சாரம் என்ற பாணியிலன்றி, வெகு இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவுடைமையின் அடிப்படையை இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா? உழைப்புதான் அத்தனைக்கும் காரணம் என்பதை மிகமிக எளிதாக அரசியல் பொருளாதாரம் என்று வகுப்பாகவே எடுத்துவிடுகிறார். (போனஸ், படி உயர்வு பிரச்சினைகளைத் தாண்டி கம்யூனிஸ்டுகள் கூட இத்தனை ஆண்டுகளில் இதைச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகமே!)
"தமிழனோட வீரத்தை உலகமே பார்த்து வியக்குது" என்ற வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டு திரையரங்கில் ஆரவாரம் கேட்கிறது. இந்திய நாட்டைக் காப்போம் என்ற உறுதியெல்லாம், இங்கு வாழும் உழைக்கும் மக்களைக் குறிக்கிறது என்பதையும், இந்தியா வல்லரசாவதெல்லாம், விவசா யத்தை நம்பி வாழும் மக்களை விட்டுவிட்டு நடக்காது என்பதையும் உணர்த்துகிறார். இயற்கை வேளாண்மை, மலட்டு விதைகள், பசுமைக்காக ராக்கெட், உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்று இந்த வார்த்தைகளை யெல்லாம் கேட்டேயிராத இளைஞர்களின் காதுகளில் சங்காக ஊதி சர்வதேச அரசியலைப் படிக்கச் சொல்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "காட்டுப் புலி அடிச்சு" பாடலின் அந்தக் கடவுள் பொறக்கும் முன்னே இந்த பூமிக்கு வந்தவுக' உள்பட வரிகள் ஒவ்வொன் றும் குறிப்பிடத்தக்கவை.
"கிராமப் பெண்களுக்கு மாராப்பை விலக்கி விலக்கியே காலம் போச்சு; நகரத்துப் பெண்களுக்கு முடியை ஒதுக்கிவிட்டே காலம் போச்சு" என்று தந்தை பெரியாரின் குரல் தான் துருவன் வழி கேட்கிறது. காட்டின் ரகசியத்தை, போரியல் நுணுக்கங்களை சொல்லி வரும் போதும், கன்னிவெடி குறித்து மனிதநேயர் களின் கருத்தை விதைக்கிறார். தவறான கருத்து எங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநரின் அக்கறை புலப்படுகிறது. இன்னும் எடுத்துச்சொல்ல ஏராளம் இருக்கிறது.. பக்கம்தான் இல்லை!
இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் துருவன் காட்டும் பொறுமையை யாரேனும் கேள்விக்குள்ளாக்கலாம். காலமெல்லாம் தன் பிரச்சாரத்திற்கு வந்த எதிர்ப்புகளையும், தனக்கு வந்த இழிவுகளையும் பொறுமையாகக் கையாண்ட தந்தை பெரியாரின் பொது வாழ்க்கை முறையை எண்ணிப்பார்த்தால் துருவனின் நியாய புலப்படும். ஆனால், "ரிசர்வேசன் கோட்டாவில படிச்சு வந்த உங்களுக்கு என்ன தெரியும்?னு நினைச்சுட்டோம் சார். எங்களை மன்னிச்சுடுங்க" என்று சொல்ல வைக்கிறாரே அங்குதான் இருக்கிறது முழுமையான வெற்றி!
இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தியும், திரித்தும், விளங்காமலும் படங்கள் வெளிவந்துள்ள சூழலில் இடஒதுக்கீட்டின் பயனை, தகுதி-திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் வன்மத்தை எடுத்துக் காட்டி வெளிவந்திருக்கும் பேராண்மை படத்தை பார்ப்பதும், பரப்புவதும் சமூகநீதியிலும், ஒடுக்கப்பட்டோர் உரிமையிலும் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
-சமா இளவரசன்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment