
Sunday, April 25, 2010
Wednesday, April 21, 2010
Thursday, April 15, 2010
அம்பேத்கர் விருது கொடுத்து ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து கொடுப்பது இருவருக்கும் சுகமாகத்தான் இருக்கும்.
தாழ்த்தப்பட்ட பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தி பல்வேறு நலத் திட்டங்களைத் தீட்டி நடைமுறைப்படுத்திவரும் மாண்புமிகு முதல்வர் அவர்களைப் பாராட்டும் வகையில் விடுதலைச் சிறுத்தைகளின் சார்பில் 2010ஆம் ஆண்டுக்கான 'அம்பேத்கர் சுடர்' விருதினை வழங்குவதெனும் எமது முடிவுக்கு மாண்புமிகு முதல்வர் அவர்கள் மகிழ்வுடன் இசைவளித்திருக்கிறார் என தொல்.திருமாவளவன் அறிவித்துள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளின்போது 'அம்பேத்கர் சுடர்', 'பெரியார் ஒளி', 'அயோத்திதாசர் ஆதவன்', 'காயிதேமில்லத் பிறை', 'காமராசர் கதிர்', 'செம்மொழி ஞாயிறு' என்னும் விருதுகளைப் பொற்கிழியுடன் சமூக நலத்தொண்டர்களுக்கு வழங்கி வரும் விடுதலைச்சிறுத்தைகள் அமைப்பு, இந்த ஆண்டு முதல்வர் கருணாநிதிக்கு அம்பேத்கர் விருது வழங்க உள்ளது. இதற்கான விழா அண்ணல் அம்பேத்கர் பிறந்த நாளான ஏப்ரல்-14 ந்தேதி சென்னையில் நடைபெறுகிறது.
ரூ.12 ஆயிரம் கோடியைத் திருப்பி அனுப்பிய அரசு:
தாழ்த்தப்பட்ட , பழங்குடியினர் நலனில் அக்கறை செலுத்தியதால் முதல்வருக்கு இவ்விருது வழங்கப்படுவதாக சிறுத்தைகள் அறிவித்துள்ளது தான் நெருடுகிறது. தமிழகத்தில் தலித் மக்களுக்கு ஒதுக்கப்பட்ட நிதி, செலவு செய்யப்படவில்லை என பல்வேறு அமைப்புகள் மட்டுமின்றி, எஸ்.சி, எஸ்.டி. ஆணையக்குழுவே குற்றம் சாட்டியுள்ளது. தலித் மக்களுக்கு எதிராகக் கட்டப்பட்ட உத்தப்புரம் சாதியச்சுவரை அப்புறப்புடுத்துவதில் முன்னின்ற தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி தமிழகத்தில் பல்வேறு போராட்டங்களை தலித் மக்களுக்காக தொடர்ந்து நடத்தி வருகிறது. அதன் மாநில அமைப்பாளர் பி.சம்பத், தமிழக அரசின் தலித் விரோதச்செயலைத் தொடர்ந்து விமர்சித்து வருகிறார்.
"தீண்டாமையை கடைப்பிடிப்போரைத் தண்டிக்கும் வகையில் குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டம், வன்கொடுமை தடுப்புச் சட்டம் போன்ற பல சட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. இந்த சட்டங்களை முழுமையாக அமல்படுத்தியிருந்தாலே இந்நேரம் தமிழகத்தில் தீண்டாமை முழுமையாக ஒழிக்கப்பட்டிருக்கும். ஆனால் அச்சட்டங்கள் அமல்படுத்தப்படுவதில்லை. கடந்த பத்தாண்டுகளில் மட்டும் தலித் மக்கள் மேம்பாட்டுக்காக அரசு ஒதுக்கிய நிதியை பல்வேறு துறைகள் பயன்படுத்தாமல் சுமார் ரூ.12 ஆயிரம் கோடியை திருப்பி அனுப்பியுள்ளன. தலித் மக்களுக்கான சட்டப்பூர்வமான உரிமையை நிலைநாட்ட வேண்டிய தமிழக அரசு, சட்டம் -ஒழுங்கு என்ற பெயரால் தலித் மக்களையே தாக்குகிறது. மாநில அளவிலும், மாவட்ட அளவிலும் உள்ள தீண்டாமை ஒழிப்புக் குழுக்கள் செயலிழந்து உள்ளன" என பி.சம்பத் குற்றம்சாட்டியுள்ள நிலையில் அம்பேத்கர் விருதிற்கு முதல்வர் தேர்வு செய்யப்பட்டுள்ளது பல்வேறு விவாதத்தங்களை உருவாக்கியுள்ளது.
பதிலுக்குப் பதிலா?
தமிழக அரசின் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் பல்வேறு விருதுகள் வழங்கப்படுகின்றன. அப்படி வழங்கப்படும் விருதுகளில் அண்ணல் அம்பேத்கர் பெயரில் ஒரு விருதும் வழங்கப்படுகிறது. கடந்த 2006-ஆம் ஆண்டு தொல்.திருமாவளவன் அவர்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டது என்பது குறிப்பிட வேண்டிய விஷயமாகும்.
தமிழக முதல்வர் கருணாநிதி, தலித் மக்களுக்கு ஒன்றும் செய்யவில்லை என்ற வாதங்களை முன்வைக்க வரவில்லை. ஆனால், தந்தை பெரியாரின் பெயரைச் சொல்லிக் கொண்டு தீண்டாமை இழிவுகளை நீக்க அவர் எடுத்த முயற்சிகள் வெற்றி பெற்றுள்ளதா என்பதைத் தான் கேள்விக்கு உட்படுத்த வேண்டியுள்ளது. இந்தியாவில் தலித் மக்களின் வாழ்நிலை மேலும், மேலும் அதளபாதாளத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது.
மத்திய அரசின் 11-வது ஐந்தாண்டு திட்ட அறிக்கையில் தலித் மக்களின் நிலை மிக ஆழமாக விவாதிக்கப்பட்டுள்ளது.
வறுமையின் பிடியில் தலித்துகள்
தலித் மக்களில் 80 சதவிகிதம் பேர் இன்னமும் கிராமப்புறங்களில் தான் வசித்து வருகின்றனர்.
இதில் விவசாயத்தை தங்களது தொழிலாகக் கொண்டிருப்போர் 16.8 சதவிகிதம் பேர்.
ஆனால், பிற சாதியைச் சேர்ந்த 41.11 சதவிகிதம் பேர் விவசாயத் தொழில்களை மேற்கொண்டு வருகின்றனர்.
ஏனெனில் தலித் மக்களிடம் நிலம் இல்லை என்ற உண்மை இந்த அறிக்கையின் ஆய்வில் தெரியவந்துள்ளது.
கிராமம் மற்றும் நகர் சார்ந்து வாழும் 75 சதவிகிதம் பேர் தலித் கூலித்தொழிலாளர்கள்தான்.
தலித் மக்கள் கிராமப்புறங்களில் 35 சதவிகிதமும், நகர்ப்புறங்களில் 39 சதவிகிதமும் வறுமைக் கோட்டுக்குக் கீழ் வாழ்கிறார்கள்.
வேளாண்மை சார்ந்த தொழில்களில் ஈடுபடும் 60 சதவிகித தலித் மக்கள் மிக அதிக அளவில் வறுமையின் பிடியில் சிக்கியுள்ளனர்.
நகர்ப்புறங்களிலும் இதே நிலைதான். அங்கு தற்காலிக வேலை செய்யும் 69.45 சதவிகித தலித் மக்களிடையே வறுமை பெருமளவு உள்ளது.
தலித் பெண்களின் கல்வி நிலை 41.9 சதவிகிதம் தான்.
உத்திரப் பிரதேதம், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், ஆந்திரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களே தலித்துகளுக்கு எதிரான குற்றங்களை நிகழ்த்துவதில் முதல் ஐந்து இடங்களில் நிற்கின்றன. இந்திய அளவில் தலித் மக்கள் பிரச்சனை இப்படி என்றால் தமிழகத்தில் அதன் நிலையைச் சொல்லவே வேண்டியதில்லை என்பதை ஆதிதிராவிடர் நலத்துறை துணைத்தலைவர் காம்ப்ளே கூறிய கருத்தில் இருந்து தெரிந்து கொள்ள முடியும்.
திமுக அரசு மீது ஆணையத்தின் குற்றச்சாட்டு
"ஆதிதிராவிடர் மேம்பாட்டுத் திட்டங்களை செயல்படுத்தி வருவதாகக் கூறும் தமிழக அரசால், அத்திட்டங்கள் எப்படி பயன்படுத்தப்பட்டது, எவ்வளவு பேர் பயன் பெற்றனர் போன்ற புள்ளி விவரங்களைத் தர முடியவில்லை. அரசு ஊழியர்களில் ஆதிதிராவிடர் எத்தனை பேர், எத்தனை பேருக்கு பதவி உயர்வு அளிக்கப்பட்டது, காலியிடங்கள் எவ்வளவு, பள்ளி, கல்லூரிகள் என்ன நிலை என்ற விவரங்களும் மாவட்ட வாரியாகவோ, துறை ரீதியாகவோ இல்லை. ஒவ்வொரு மாநிலத்திலும் பணியாளர் சங்கம் மற்றும் அரசுக்குமிடையே கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் தொடர்பு அதிகாரி இருப்பார். அதுபோன்று அதிகாரி இங்கு இல்லாததால், தகவல் பரிமாற்றம் சரியாக இல்லை என்று கருதுகிறேன். பிற மக்கள் ஆக்கிரமித்துள்ள இடங்கள் தான் பல இடங்களில் ஆதிதிராவிடர்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன. அவற்றை மீட்பது தொடர்பாக 8 ஆயிரம் வழக்குகள் நிலுவையில் உள்ளன. தமிழகம் முற்போக்கான மாநிலம் எனக் கருதப்படும் நிலையில், மனிதக் கழிவுகளை மனிதனே எடுக்கும் நிலை உள்ளது. அதற்கான புகைப்பட ஆதாரம் உள்ளது. வன்கொடுமை வழக்குகளில், தண்டனை விகிதம் மிகக் குறைவாக உள்ளது. தமிழகத்தில் இதற்கென சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க வேண்டும். தலித்துகளுடன் கோவிலுக்குச் சென்ற குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா மீதான தாக்குதல் குறித்து, இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை" என காம்ப்ளே கூறியவுடன் முதல்வர் கருணாநிதி என்ன சொன்னார்?
"தமிழக அரசு ஆதிதிராவிடர் நலனில் அக்கறையில்லாத அரசு என்பதைப் போல ஒரு ஆணையத்தின் துணைத் தலைவர் சொல்லியிருப்பதற்காக எனது வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு - இது பற்றிய விவரத்தை மத்திய அரசின் கவனத்திற்கு, குறிப்பாக பிரதமரின் கவனத்திற்குக் கொண்டு செல்வதாகவும் இருக்கிறேன்" எனக்கூறியதை மிரட்டல் என்பதைத் தவிர என்னவாக இருக்க முடியும்.
சேரிகளைத் திரட்டும் செங்கொடி இயக்கம்
மனிதக்கழிவை மனிதன் அகற்றுவதை எதிர்த்து வீரம் செறிந்த போராட்டத்தை அருந்ததிய இயக்கங்கள் இன்னமும் நடத்தி வருகின்றன. சென்னையில் பல்லாயிரக்கணக்கான அருந்ததிய மக்களைத் திரட்டி தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி நடத்திய பேரணியின் போது வலுவாக முன்வைக்கப்பட்டது மனிதக்கழிவை மனிதன் அகற்றும் பிரச்சனை தான். ஆனால், தமிழகத்தில் இந்த நிலை இல்லை என கருணாநிதி கூறுகிறார். "தன்னெஞ்செறிவது பொய்யற்க" என்ற வள்ளுவனின் குறள் தான் நமக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
தமிழகத்தில் திராவிட இயக்கங்களுக்கு கொஞ்சமும் சளைக்காமல் தீண்டாமை ஒழிப்பு போராட்டத்தில் செங்கொடி இயக்கம் தொடர்ந்து களம் கண்டு வருகிறது.
பள்ளன்கட்சி, பறையன் கட்சி என்ற பெயரைக் கொண்டிருந்தாலும் நெஞ்சை நிமிர்த்தி அம்மக்களுக்காக தஞ்சைத் தரணியில் தோழர் பி.சீனிவாசராவ் போட்ட போராட்ட விதை கிளைவிரித்து தமிழகம் முழுவதும் தலித் மக்களுக்கான விடுதலைக்கான போராட்டங்களாய் வெடித்துக் கிளம்பிக்கொண்டிருக்கிறது
தமிழகத்தில் தலித் மக்களுக்கான இயக்கங்கள் எனச் சொல்லிக் கொள்ளும் பல்வேறு இயக்கங்கள் எடுக்கத் தயங்கிய பல்வேறு பிரச்சனைகளுக்கான போராட்டங்களை செங்கொடி இயக்கமான மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தீண்டாமை ஒழிப்பு முன்னணியோடு இணைந்து நடத்தியுள்ளதை பதிவு செய்வது காலத்தின் அவசியமாகிறது.
களம் கண்ட போராட்டங்கள்:
திருவண்ணாமலை மாவட்டம், தாமரைப்பாக்கம் அக்னீஸ்வரர் கோவில், திண்டுக்கல் மாவட்டம், ஆயக்குடி காளியம்மன் கோவில், நெல்லை மாவட்டம், பந்தப்புளி மாரியம்மன் கோவில், பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்ளடை தாலுகா பாதாங்கி கிராமம் சிவன் கோவில், பெரம்பலூர் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம் அழகாபுரம் காசிவிஸ்வ நாதர் கோவில், திருவண்ணாமலை மாவட்டம், வேடவந்தாடி கிராமம் கூத்தாண்டவர் கோவில், விழுப்புரம் மாவட்டம், காங்கியனூர் கிராமம் திரௌபதியம்மன் கோவில், நாகை மாவட்டம் செட்டிப்புலம் கிராமம் ஏகாண்ட ஈஸ்வரர் கோவில் ஆகிய ஆலயங்களில் தலித் மக்களின் ஆலயப் பிரவேசம் வெற்றி பெற்றதற்குப் பின் இருந்தது மார்க்சிஸ்ட் கட்சியும், தீண்டாமை ஒழிப்பு முன்னணியும் தான். தமிழகத்தில் பல கிராமங்களில் இரட்டைக் குவளை முறை ஒழிப்பு, முடிவெட்டும் உரிமை, பொதுப்பாதையை பயன்படுத்தும் உரிமை, சலவையகங்களில் துணி சலவை செய்துதரும் உரிமை, பொதுக் கழிப்பிடத்தை பயன்படுத்தும் உரிமை, பொது மயான உரிமை, தனி மயானத்தில் பாதை உரிமை என கடந்த இரண்டு ஆண்டுகளுக்குள் எண்ணற்ற தீண்டாமை ஒழிப்புப் போராட்டங்கள் நடத்தப்பட்டு இழிநிலை துடைத்தெறியப்பட்டுள்ளது.
கோரிக்கை நிறைவேறியதா?
கடந்த செப்டம்பர் 30ம் தேதி அமரர் பி. சீனிவாசராவ் நினைவு தினத்தன்று தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் சார்பில் தலித் மக்களை ஆலயத்திற்கு அழைத்துச் சென்றபோது, பிரச்சனைக்கு சட்டப்பூர்வமான தீர்வு ஏற்படுத்தாமல் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் தடியடித் தாக்குதலை நடத்தியதையும், இச்சம்பவத்தில் குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் ஜி.லதா கடுமையாகத் தாக்கப்பட்டு பாதிக்கப்பட்டதையும், விவசாயிகள் சங்க மாநில பொதுச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், விழுப்புரம் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் செயலாளர் ஜி.ஆனந்தன் உள்பட 103 பேர் மீது வழக்குத் தொடர்ந்து கைது செய்யப்பட்டு கடலூர் சிறையில் அடைக்கப்பட்டதையும் இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது.
இப்பிரச்சனை சம்பந்தமாக தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில் ஒரு மனு வழங்கப்பட்டது.அதில் "தலித் மக்களுக்கான கல்வி- வேலை வாய்ப்பிற்கான இட ஒதுக்கீட்டை சட்டப்பூர்வமாகவும், அவர்களின் மக்கள் தொகைக்கு ஏற்பவும் 18 சதவிகிதத்திலிருந்து 19 சதவிகிதமாக உயர்த்த வேண்டும். தமிழ்நாட்டில் தலித், பழங்குடி மக்களின் சமூக, பொருளாதார நிலைமைகளை ஒரு குறிப்பிட்ட காலவரையறைக்குள் ஆய்வு செய்து, உரிய முடிவுகளை மேற்கொள்வதற்கு உயர்நீதிமன்ற நீதிபதி தலைமையில் தமிழ்நாடு அரசு ஒரு ஆணையத்தை அமைக்குமாறும், இந்த ஆணையம் தலித்-பழங்குடி மக்களின் பிரச்சனைகளில் தொடர்ந்து தலையிடும் வகையில் இதற்கு சட்டப்பூர்வமான அந்தஸ்தும், அதிகாரமும் அளிக்க வேண்டும்.
பஞ்சமி நிலங்களை மீட்க வேண்டும்
மனித மாண்பைக் காக்கும் வகையில் பாதாளச் சாக்கடை அடைப்புகளை அகற்றுவதற்கு தொழிலாளர்களை அதனுள் இறக்குவதை தடை செய்து தமிழக அரசு உடனடியாக உத்தரவிட வேண்டும். மனிதக்கழிவை அகற்றுவதற்கானப் பணியில் மனிதர்களைப் பயன்படுத்துவதை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். இங்கும் நவீன முறைகள் அமலாவதை தமிழ்நாடு அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும். இப்பணியில் ஈடுபட்டு வரும் தொழிலாளர்களுக்கு மாற்றுப் பணி வழங்க வேண்டும். தமிழ்நாடு அரசு ஏற்கனவே ஏற்றுக் கொண்டபடி வெட்டியான்களை மயான உதவியாளர்கள் எனப் பெயர்மாற்றம் செய்து, உள்ளாட்சி ஊழியர்களாக நியமனம் செய்ய வேண்டும்.
தமிழ்நாடு அரசு ஏற்றுக்கொண்டபடி விடுதலைப் போராளி ஒண்டி வீரனுக்கு நினைவு மண்டபம் எழுப்ப வேண்டும். தலித் - பழங்குடி மக்களுக்கான பின்னடைவு பதவி இடங்கள் தமிழ்நாட்டில் பல்லாயிரக்கணக்கில் காலியாக உள்ளன. இவற்றை தாமதமின்றி தமிழ்நாடு அரசு நிரப்ப வேண்டும். தலித் - பழங்குடி மக்களுக்கான உபதிட்டத்திற்கு அவர்களின் மக்கள் தொகைக்கேற்ப துறைவாரியாக நிதி ஒதுக்குவதையும், அவ்வாறு ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக அம்மக்களின் மேம்பாட்டிற்குச் செலவிடுவதையும் தமிழ்நாடு அரசு உத்திரவாதம் செய்ய வேண்டும். தலித் மக்களுக்கு மேலும் அதிகமான தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும். பழுதடைந்துள்ள தொகுப்பு வீடுகளை பழுது நீக்கித் தர வேண்டும். தலித் மக்களுக்கு முன்னுரிமையளித்து நிலம் வழங்க வேண்டும்.
கணிசமான தலித் மக்கள் நிலம் இல்லாமல் கூலி உழைப்பாளிகளாக இருப்பதாலும், சாதி இந்துக்களின் நிலத்தில் வேலை செய்து அன்றாட வாழ்க்கை நடத்த வேண்டியிருப்பதாலும், விழிப்புணர்வோடு தங்களது சமூக உரிமைகளை நிலைநாட்டுவதில் பிரச்சனை உள்ளது என்பதைக் கணக்கில் எடுத்து, அரசு இப்பணிக்கு முக்கியத்துவம் தர வேண்டும். பஞ்சமி நிலங்களை மீட்டு தலித் மக்களுக்கு வழங்க வேண்டும். மத்திய வனவுரிமைச் சட்டத்தை முழுமையாக அமல்படுத்த வேண்டும். பழங்குடி மக்களின் நில உரிமையைப் பாதுகாக்க வேண்டும். தமிழ்நாட்டின் பல்லாயிரம் கிராமங்களில் நிலவும் தீண்டாமைக் கொடுமைகளுக்கு முடிவு கட்ட வேண்டும். தமிழ்நாடு அரசு இதற்காக பலமுனை செயல்திட்டத்தை உருவாக்க வேண்டும். ஆலயங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்களில் தலித் மக்களுக்கு சம உரிமையை அரசு உடனடியாக உத்தரவாதம் செய்ய வேண்டும்.
தலித் மக்கள் மீதான வழக்குகளைத் திரும்பப்பெறு
வன்கொடுமைத் தடுப்புச் சட்டம், குடியுரிமைப் பாதுகாப்புச் சட்டங்களை உறுதியுடன் அமல்படுத்த வேண்டும். இதனை அமல்படுத்துவதில் காவல் துறை மற்றும் வருவாய்த்துறை மத்தியில் காணப்படும் குறைபாடுகளைக் களைய வேண்டும். இச்சட்டம் சரிவர அமலாவதை ஏற்கனவே வலியுறுத்தியபடி தீண்டாமை ஒழிப்புக் குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும். விழுப்புரம் மாவட்டம், காங்கியனூரில் சட்டமன்ற உறுப்பினர் ஜி. லதா உள்பட தலித் மக்கள் மீது காவல்துறை தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகள் பற்றி நீதி விசாரணை நடத்த வேண்டும். இதற்குக் காரணமான காவல்துறை மாவட்டக் கண்காணிப்பாளர் மற்றும் இதர அதிகாரிகள் மீது உரிய நடவடிக்கை மேற்கொள்வதோடு தலித் மக்கள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்பப் பெற வேண்டும். நாகை மாவட்டம், செட்டிப்புலத்தில் தலித் மக்கள் மற்றும் ஆர்.டி.ஓ., காவல்துறையினர் மீது தாக்குதல் நடத்திய வன்முறையாளர்கள் அனைவரையும் வன்கொடுமைத் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்ய வேண்டும். தலித் மக்களின் ஆலய நுழைவை உத்திரவாதம் செய்ய வேண்டும்" உள்ளிட்ட பல கோரிக்கைகள் வைக்கப்பட்டன. இவற்றில் ஒரு கோரிக்கையாவது தமிழக முதல்வர் கருணாநிதி நிறைவேற்றினாரா?
தீண்டாமையின் பிடியில் அம்பேத்கர்
மத்திய அரசின் தேசிய திரைப்பட வளர்ச்சிக்கழகத்தின் தயாரிப்பில் நடிகர் மம்முட்டி நடித்து மூன்று தேசிய விருதுகளைப் பெற்றது பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் திரைப்படம். இப்படத்தை கடந்த 12 ஆண்டுகளாக திரையரங்குகளில் திரையிடப்படாமல் மத்திய அரசு முடக்கி வைத்துள்ளது. அம்பேத்கருக்கு நிகழ்ந்துள்ள இந்த நவீன தீண்டாமையை எதிர்த்து பல்வேறு அமைப்புகள் குரல் கொடுத்தும், சட்டமன்றத்தில் பதிவு செய்தும் இன்னமும் முடக்கப்பட்டுள்ளார் அம்பேத்கர். இந்த நிலையில் தமிழக முதல்வர் கருணாநிதிக்கு, அண்ணலின் பிறந்த நாளில் அவர் பெயரில் விருது. என்ன சொல்வது?
அம்பேத்கரின் கொள்கைகளை நிறைவேற்றுவதில் அக்கறை காட்டாமல், பதவி அரசியலில் சிக்கி, நாடு நகரமெங்கும் கட் அவுட், பேனர்களில் முகம் காட்டி, வார்த்தை ஜாலங்களில் மக்களை ஏமாற்றுவது போதாதென்று இப்போது அம்பேத்கர் விருது வேறு. உனக்கு நான் தர்றேன், எனக்கு நீ கொடு என்று பரஸ்பரம் அம்பேத்கர் விருது கொடுத்து ஒருவர் முதுகை ஒருவர் சொறிந்து கொடுப்பது இருவருக்கும் சுகமாகத்தான் இருக்கும். காலம்காலமாக ஒடுக்குதலுக்கு உள்ளாகி நிற்கும் தலித் மக்களுக்கு இதனால் ஒரு பயனும் இல்லை.
நன்றி(ப.கவிதா குமார்)
கீற்று
'தலித் நாடு'
"உலகம் முழுக்க எத்தனையோ உரிமைப் போராட்டங்கள் நடக்கின்றன. அவை அனைத்தும் பெரும்பான்மை மக்களிடம் இருந்து பிரிந்துபோவதற்கான போராட்டங்களே. பாலஸ்தீனம் தொடங்கி ஈழம் வரைக்கும் எல்லாமே அப்படித்தான். ஆனால், இந்த நாட்டின் 20 சதவிகித தலித் மக்கள், பெரும்பான்மை மக்களோடு சேர்ந்து வாழ்வதற்காக மூவாயிரம் ஆண்டுகளாகப் போராடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த வித்தியாசத்தைத் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள். யாரும் 'தலித் நாடு' அமைக்கப் போராட வில்லை. 'எங்களைச் சேரிக்குள் ஒதுக்கித் தனிமைப்படுத்த வேண்டாம். சேர்ந்து வாழ்வோம், அன்பாக இருப்போம்' என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் குரல்!"
உணவு, உடை, பேச்சு, இலக்கியம், அரசியல், சினிமா, திருமணம், சாவு, கலாசாரம் எனச் சகல இடங்களிலும் நிறைந்திருக்கும் அசூசையான சாதிக்கு எதிராகத் தொடர்ந்து ஒலிக்கிறது எழுத்தாளர் அழகிய பெரியவனின் குரல். 'குறடு' என்ற இவரது சிறுகதை பொன்.சுதாவின் இயக்கத்தில் 'நடந்த கதை' என்ற பெயரில் குறும்படமாக வெளியானது. அது இப்போது உலகக் குறும்பட விழாவில் சிறந்த இந்தியக் குறும்படமாகத் தேர்வாகி இருக்கிறது.
"வட ஆற்காடு மாவட்டத்தில் தலித் மக்கள் செருப்பு அணிந்து நடக்கக் கூடாது என்று சுதந்திரத்துக்கு முன்பு இருந்த நிலைபற்றியது இந்தக் கதை.
ஆனால், இப்போதும் இது உண்மையாகவே இருப்பது கொடுமை.
மிகச் சமீபத்தில்கூட தேனி மாவட்டத்தில் செருப்பு அணிந்து பள்ளிக்குச் சென்ற தலித் சிறுவர்கள் கட்டிவைத்து அடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.
தர்மபுரி மாவட்ட கிராமத்தின் பள்ளி சத்துணவுக் கூடம் ஒன்றில், தலித் பெண் செய்த சமையலைத் தங்கள் பிள்ளைகள் சாப்பிட மாட்டார்கள் என்று சாதி இந்துக்கள் பெரும் பிரச்னை கிளப்ப, அரசு அந்த தலித் ஆயாவைப் பணிமாறுதல் செய்து 'சுமுகமான தீர்வை' அளித்தது.
விருதுநகர் மாவட்டக் கிராமம் ஒன்றில், 'தலித்கள் ஆண் நாய் வளர்க்கக் கூடாது' என்ற கட்டுப் பாடு நவீன யுகத்திலும் தொடர்கிறது. தலித்கள் ஆண் நாய் வளர்த் தால் அது உயர் சாதியினரின் பெண் நாய்களுடன் உறவுகொண்டு விடுகிறதாம். தலித்களின் பெண் நாயை இவர்கள் வீட்டு ஆண் நாய் உறவுகொண்டால், அதில் ஒன்றும் தீட்டு இல்லையாம். ஆனால்,
நாம் 'இப்பெல்லாம் யாருங்க சாதி பார்க்குறா?' என்று பேசிக்கொண்டு இருக்கிறோம்.
50 வயதான உங்கள் அப்பாவை 'ஏய், இங்க வாடா' என்று 15 வயதுச் சிறுவன் அழைத்தால் உங்களுக்குக் கோபம் வருமா, வராதா? ஆனால், வயதான தலித் மக்களை உயர் சாதியினரின் சிறுவர்கள்கூட 'வாடா, போடா' என அழைத்து அடிமைகளாக நடத்தும் வன்முறை யாருக்கும் தவறாகத் தோன்றவில்லையே, ஏன்? ஏனென்றால், இங்கு சிந்தனை, செயல் அனைத்திலும் சாதி மட்டுமே இருக்கிறது. தமிழ்ப் பண்பாடு என்பதே சாதிப் பண்பாடுதான். இதைப் பேசினால் 'அதெல்லாம் கிராமத்துலதான் சார்' என்பார்கள். அவர்களுக்கான எளிய உதாரணம் 'மணமகன் தேவை, மணமகள் தேவை' விளம்பரங்கள். 'சாதி தடை இல்லை - எஸ்சி, எஸ்.டி. தவிர' என்று எல்லாம் விளம்பரங்கள் வருகின்றன. இதோ இருக்கும்
திருச்சி - திண்ணியத்தில் ஊரே கூடி தலித்கள் வாயில் மனித மலத்தைத் திணித்தார்கள். அந்த வழக்கின் தீர்ப்பு என்னவென்று யாருக்காவது தெரியுமா? 'அது திட்டமிட்டு நடந்த சம்பவமாகத் தெரியவில்லை' எனச் சொல்லி, இரண்டாயிரம் ரூபாய் அபராதம் விதித்து ஒரு வன்கொடுமை தீர்ப்பைச் சொன்னது நீதிமன்றம். 'பீ" என்று சொல்லவே பலருக்கு நா கூசுகிறது.
ஆனால், அதை ஒரு மனிதனின் வாயில் திணிப்பது எத்தனை உச்சக்கட்ட வக்கிரம்? இதைப்பற்றி இந்த தமிழ்ச் சமூகம் என்ன எதிர்வினை செய்தது?ஏன் யாரும் ரத்தம் கொதித்து வீதிக்கு வரவில்லை? மலேசியாவிலும், ஈழத்திலும், கர்நாடகாவிலும் தமிழர்கள் ஒடுக்கப்பட்டால் கோபப்பட்டு வீதிக்கு வருபவர்கள், திண்ணியம் தீர்ப்புக்கு எதிராக என்ன செய்தார்கள்? தலித்கள் தமிழர்கள் இல்லையா?
இந்திய சிவில் சமூகத்தின் சாதி அமைப்பு என்பது ஒரு பிரமிடு வடிவத்தில் இருக்கிறது. மேலே மேல் சாதியினரும், இடையில் இடை நிலைச் சாதியினரும், அடியில் தாழ்த்தப்பட்டவர்களும் இருக்கிறார்கள். மேலே உள்ள அத்தனை பேரின் சுமைகளும் அடியில் உள்ள மக்களை அழுத்துகிறது. இந்த பிரமிடு வடிவத்தை தலை கீழாகப் புரட்டிப் போட வேண்டும் எனச் சொல்லவில்லை. கிடைமட்டமாகச் சமப்படுத்தி சமத்துவமான சமுதாயத்தை உருவாக்க வேண்டும் என்பதே ஒடுக்கப்பட்ட மக்களின் விருப்பம். ஆயிரமாயிரம் ஆண்டுகளாக அடிமைப் பட்டுக்கிடந்தும்கூட எங்களிடம் ஆதிக்கக் குணம் இல்லை. அன்பையும், சகோதரத் துவத்தையுமே நாங்கள் விரும்புகிறோம்!"
- அழகிய பெரியவன்
எழுத்தாளர்
Sunday, April 4, 2010
அண்ணல் அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர்கள் கைது
சுற்றி வைத்த நெருப்பின் சுவடு பற்றி எரியும் குடிசையிலிருந்து, கருகும் உயிர்களுக்கு இடையில் கசிந்துருகும் தாய்மையால் தனது கைக்குழந்தையின் உயிரைக் காப்பாற்ற கிடைத்த இடுக்கின் வழியே தூக்கி எரிந்த தாயின் மீது மீண்டும் அந்த குழந்தை வந்து விழுந்த கொடூரம் நடந்த, அரைப்படி நெல்மணிகளை கூலியாய் கேட்டதற்காக 44 உயிர்கள் பொசுக்கப்பட்ட வெண்மணி தினமான அதே டிசம்பர் 25.
விண்மீன்கள் கண்பார்க்க சூரியன் தோன்றுமோ? புகழ் மைந்தன் தோன்றினானே! கல்வாரி மலையிலே கல் ஒன்று பூப்பூக்க கருணைமகன் தோன்றினானே! நூற்றாண்டு இரவினை நொடியோடு போக்கிடும் ஒளியாக தோன்றின்னே! முட்காடு எங்குமே பூக்காடு தோன்றவே புவிராஜன் தோன்றினானே (நன்றி: கவிஞர் வைரமுத்து) என கிருத்துவர்கள் வருத்தப்பட்டு பாரம் சுமந்த சிசுபாலன் பிறந்த நாளை கொண்டாடும் அதே டிசம்பர் 25.
இந்த தேசத்தை நேசித்த, ஒடுக்கப்பட்ட மக்களுக்காக தனது வாழ்நாளை அர்ப்பணித்த, இந்திய வரலாற்றில் கோடிக்கணக்கான மக்கள் தொகை கொண்ட ஒரு சமூகத்தையே எழுந்து நிற்கவைத்த, மாமேதை டாக்டர் அம்பேத்கரின் சிலையைப் பாதுகாக்க அதே டிசம்பர் 25 நடந்த சம்பவத்தின் கதை இது.
2009 டிசம்பர் 25 இல் துவங்கி..
கி.பி 2009 ஆண்டு டிசம்பர் 25 ஆம் தேதி முழுமையாக இருள் விலகாத காலைப்பொழுது. பல நூற்றண்டாக சந்திக்காத காட்சியை அந்த முந்திரிக்காடு கண்டது. நூற்றுக்கணக்கான இளைஞர்கள் கையில் தடி அதன் மேல்கட்டப்பட்ட கொடியுடன் தங்களது இளம் பாதங்களைப் பதித்து முந்திரிக்காட்டின் இடையில் கிடைத்த ஒற்றையடி தடத்தைப் பற்றி முன்னேறினர். வெள்ளை நிறம் கொண்ட அந்த கொடியினுள் சிகப்பு நட்சத்திரம் பதிக்கப்பட்டிருந்தது. இடதுபுறம் மேலிருந்து கீழாக டி.ஒய்.எப்.ஐ என்ற எழுத்து மின்னியது. என்ன ஆனாலும் சரி இலக்கை அடைந்தே தீருவது என்ற வைராக்கியம் அவர்கள் முகங்களில் தெரிந்தது.
சரளைக் கட்களும், நெருஞ்சி முட்களும் காலில் குத்தியபோதும் அந்தக் கால்கள் பயணத்தை நிறுத்தவில்லை. அவர்கள் செல்லும் இடத்திற்கு மிக எளிதாக செல்ல சாலைவசதி இருக்கிறது. அந்த வழியை அவர்கள் தேர்ந்தெடுக்காததற்குக் காரணம் இருந்தது. இந்த இளைஞர்களின் வருகையை எதிர்பார்த்து கண்களில் கோபத்தையும், நெஞ்சில் வன்மத்தையும், கையில் தடிகளையும், துப்பாக்கிகளையும் தாங்கி காவல் துறையினர் 400க்கும் மேற்பட்டோர் தயாராக இருந்தனர். உளவுத்துறையினர் தனியாக அலைந்துகொண்டு இருந்தனர். ஆனால் நான்கு கிலோமீட்டர் சுற்றி நடந்து வரும் இந்த ஒற்றையடிப் பாதைவழியாக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வருவதை காவல்துறையினர் கற்பனைகூட செய்து பார்த்திருக்க மாட்டார்கள். ஆனால் அந்த பழைய பட்டிணம் கிராமத்தின் மக்கள் இவர்கள் மீது நம்பிக்கையுடன் “அவர்கள் வருவார்கள்” என எதிர்பார்த்து நின்றனர். அவர்களின் வருகை அந்த கிராமத்து மக்களின் தன்மானத்தை மீட்டெடுக்கும் வருகை.
“அசோகன் தோழர்.. கிராமத்தின் அருகில் வந்துவிட்டோம்” வழிகாட்டிய சிலம்பரசனும், ராமரும் சேர்ந்து சொன்னார்கள். சத்தியராஜ் முந்திரிக்காட்டின் இறுதியிலிருந்து ஊரின் தூரத்தை கண்களால் அளந்து பின்பு சொன்னார் “ தோழர் இன்னும் 500 அடியில் ஊர் வந்துவிடும்." அசோகன் ராஜேஷ்கண்ணாவைப் பார்க்க இருவரும் தலையை அசைத்து அடுத்த கட்ட நடவடிக்கைக்குத் திட்டமிட்டனர். எல்லோரும் ராஜேஷ்கண்ணா (வாலிபர் சங்க மாவட்ட செயலாளர்) மற்றும் அசோகன் (வாலிபர்சங்க மாவட்ட தலைவர்) என்ற அந்த கூட்டத்திற்குத் தலைமை தாங்கிய இரண்டு இளைஞர்களின் வாயிலிருந்து வரும் அடுத்த வார்த்தைக்காக காத்திருந்தனர்.
இன்குலாப்! ஜிந்தாபாத்! என்ற முழக்கத்துடன் முன்னோக்கி கையை சுட்டி, இருவரும் ஓடத்துவங்க அனைத்து இளைஞர்களும் அவர்களைப் பின் தொடர்ந்தனர். ஊருக்குள் புகுந்து இலக்கை நோக்கி அவர்கள் ஓடத்துவங்க, இவர்களின் வருகையை எதிர்பார்க்காத காவல்துறையினர் திடீரென முழித்து, பின் விழித்து, சுதாரித்து கையில் ஓங்கிய தடியுடன் இந்த இளைஞர்களை இலக்கை எட்டும் முன்பு தடுத்து நிறுத்தினர். 200 இளைஞர்கள் கைது செய்யப்பட்டு விருதாச்சலத்தில் சிறைவைக்கப்பட்டனர். அவர்கள் இலக்கு பழையபட்டிணம் கிராமத்தில் இருந்த அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவிப்பதுதான். இது என்ன சமூக விரோத செயலா என தாங்கள் கேட்பது புரிகிறது. கொஞ்சம் பின்னோக்கி பயணிக்காமல் இது புரியாது.
என்ன நடந்தது?
அமபேத்கர் சிலைக்கு மாலை அணிவிக்கச் சென்ற இந்திய ஜனநாயக வாலிபர் சங்க ஊழியர்கள் கைது செய்யப்பட்ட 2009 டிசம்பர் 25இலிருந்து வருவோம். கைது செய்யப்பட்ட இளைஞர்கள் கைது செய்யப்படும்போது அறிவித்தது இதுதான். “நாங்கள் மீண்டும் இந்திய குடியரசு தினமான ஜனவரி 26 ஆம் தேதி மாலையிட வருவோம். இன்னும் நூற்றுக்கணக்கான இளைஞர்களுடன்.”
கடலூர் மாவட்டம் விருதாசலம் அருகில் உள்ள பழையப்பட்டினம் என்ற கிராமத்தில் 200க்கும் மேற்பட்ட தலித் குடும்பங்கள், 35 இஸ்லாமிய குடும்பங்கள், 40 கோனார் சமூக குடும்பங்கள், 20 ரெட்டியார் சமூக குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2008 ஆகஸ்ட் 15 அன்று நடந்த கிராமப் பஞ்சாயத்தில் சிறப்பு கிராமசபா கூட்டம் தலைவர் சி.தர்மலிங்கம் தலைமையில் நடந்தது. இதில் பஞ்சாயத்து நூலகம் எதிரில் அண்ணல் அம்பேத்கர் திருவுருவ சிலை அமைக்க ஏகமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அப்போதெல்லாம் பிரச்சனை இல்லை. அதன் முன்பு நடந்த பஞ்சாயத்து தேர்தலில் அப்துல் ஹை ஒன்றிய கவுன்சில் பதவிக்கு போட்டியிட்டு தோல்வியடைகிறார். தனது தோல்விக்கு தலித் மக்கள்தான் காரணம் என்ற கோபத்தில் இருந்தவர் இந்த சிலை ஊருக்கு மத்தியில் வந்ததை பொறுத்துக்கொள்ள முடியாமல் பிரச்சனையை உருவாக்குகிறார்.
இஸ்லாமியர்கள் உருவவழிபாட்டை மேற்கொள்ளாத காரணத்தால் இஸ்லாமியர்கள் வீட்டுக்கு முன் அந்த சிலை இருக்கக்கூடாது என பிரச்சனையாகிறது. சிலை இருக்கும் இடத்திற்கும் அவர்களது வீட்டிற்கும் எந்த சம்பந்தமும் இல்லை. இருப்பினும் சிலைக்கு மாலையோ, மரியாதையோ செய்ய தலித் மக்களுக்கு அனுமதி மறுக்கப்படுகிறது; தலித் மக்கள் தவித்துள்ளனர். தலித் தலைவர்களை சந்தித்து முறையிடுகின்றனர். ஆனால் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் ஏன் தேவையற்ற பிரச்சனை என்று கூறி, அந்த சிலையை அங்கிருந்து அகற்றி தலித் மக்கள் பகுதியிலே வைத்துக்கொள்ள வலியுறுத்துகிறார். அதுமட்டுமல்ல அந்த சிலையை அப்புறப்படுத்துவதாக அவ்வூர் மக்கள் சம்பந்தம் இல்லாமல் சிலையை "அகற்றிக்கொள்கிறோம்" என்று இஸ்லாமிய ஜமாத்துக்கு தன் கைப்பட கடிதமும் கொடுக்கிறார். இந்தப் பின்னணியில் வாலிபர் சங்கம் போராட்டத்தைக் கையில் எடுத்தது. அம்பேத்கர் சிலைக்கு டிசம்பர் 25ம் தேதி மாலை அணிவிக்கும் போராட்டத்தை அறிவித்தது. போலீஸ் துணையுடன் போராட்டம் தடுக்கப்பட்டது. களப்போராட்டம் மட்டுமல்லாமல், நீதிமன்றத்தின் கதவையும் வாலிபர் சங்கம் தட்டியது.
ஜனவரி 26 ஆம் தேதியும் பிரச்சனை உருவாகும் சூழல் இருந்ததால் வழக்கறிஞர் திருமூர்த்தியிடம் தொலைபேசியில் தகவல்களைச் சொல்லி இப்பிரச்சனை குறித்த ஆவணங்கள் ஒப்படைக்கப்பட்டது. வழக்கறிஞர் திருமூர்த்தி, வழக்கறிஞர் தியாகு ஆகியோர் இந்த பிரச்சனையின் தீவிர தன்மையைச் சுட்டிக்காட்டி 19.01.10 அன்று பொதுநலவழக்கு தொடுக்கின்றனர். அன்றே உடனடியாக வழக்கை விசாரணைக்கு எடுக்க வலியுறுத்துகின்றனர். நீதிமன்றம் ஏற்றுக்கொண்டது.
20.01.10 வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டு, ஒரு தேசத் தலைவரின் சிலைக்கு நடந்த அவமரியாதையை தொடர அனுமதிக்க முடியாது என்ற அடிப்படையில் அன்று காலை 11.30 மணிக்கு உறுத்து கட்டளை (இன்ஜக்ஷன்) பிறப்பித்து கீழ்வருமாறு கூறினர் “மீண்டும் இந்த வழக்கில் மறு உத்திரவு பிறப்பிக்கும் வரை அண்ணல் அம்பேத்கர் சிலையை இருக்கும் இடத்திலிருந்து அகற்றக்கூடாது எனவும், மேலும் எந்த நபராலும் எந்த விதமான சேதமும் சிலைக்கு விளைவிக்கப்பட கூடாது எனவும், மீண்டும் இந்த வழக்கு 08.01.10 அன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படும்”.
பழைய பட்டிணம் கிராமத்தில்...
ஆனால் அன்று இரவு (20.01.10) பழைய பட்டிணம் கிராமத்தில், 11.30மணிக்கு 200 போலிசுக்கும் மேல் குவித்து, தலித் மக்களை மிரட்டி அவர்களது அனைத்து வீடுகளையும் பூட்டினர். ஒவ்வொரு வீட்டிற்கும் முன் ஒரு போலிஸ் காவல். காவல் வண்டிகள் குவிக்கப்பட்டது. ஜே.சி.பி எந்திரம், லோடு லாரி என அம்பேத்கர் சிலையை ஊரின் பொதுவிலிருந்து பெயர்த்தெடுக்கத் தயாரானார்கள். பொதுமக்கள் யாரும் சிலைக்கு அருகில் அனுமதிக்கப்படவில்லை. அக்கிராமத்தின் வார்டு உறுப்பினர் ரேனு தகராறு செய்கிறார் அதனால் தாக்கப்படுகிறார், அம்பேத்கர் சிலையை எடுக்கக்கூடாது என்றும், கோர்ட்டில் இன்ஜக்ஷன் பெறப்பட்டுள்ளது என்றும் கூறிய வாலிபர் சங்கக் கிளைச் செயலாளரும், இந்த வழக்கின் மனுதாரருமான அமிர்தலிங்கம் காவல்துறையுடன் விவாதத்தில் ஈடுபட்டதால் தாக்கப்பட்டு வீட்டினுள் அடைக்கப்படுகிறார். எதிர்ப்பு தெரிவித்த இன்னும் சில இளைஞர்களும், பொதுமக்களும் தாக்கப்பட்டனர். விடியகாலை 3.30 மணிக்கு அதாவது 4 மணிநேரம் போராடி அந்த பிரம்மாண்டமான சிலை ஊரின் பொதுவிலிருந்து அகற்றப்பட்டது. அந்த மகாமனிதனின் சிலை தலித் மக்கள் பகுதியில் அவர்கள் தண்ணீர் வசதிக்காக பல ஆண்டுகளாக பயன்படுத்திய குளத்தை அடைத்து, மண்கொட்டி அந்த இடத்தின் மேல் நிறுவப்பட்டது. என்னதான் மாமேதை அம்பேத்கர் தேசத் தலைவராய் இருப்பினும் அவருக்குரிய இடம் எது என்பதில் அரசு எந்திரம் தெளிவாக இருந்தது. ஆளும் வர்க்க வன்மத்தின் வெளிப்பாடாய் இந்த நிகழ்வு இருந்தது. விருதாசலம் டி.எஸ்.பி ராஜசேகர், ஆய்வாளர் திருமால் தலைமையில் சிலையை அகற்றி எடுக்க ஏற்பாடு நடந்தது.
இதற்கிடையில் அன்று இரவே சென்னையில் தகவல் அறிந்த வழக்கறிஞர் திருமூர்த்தி கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளை தொடர்பு கொள்ள முயல்கிறார். டிஎஸ்பி, ஆய்வாளர் ஆகியோர் போன் எடுக்கவிலை. பின் மாவட்ட எஸ்.பி அஸ்வின் கோட்டீஸிடம் “ இன்று காலை சிலையை அகற்ற கூடாது என நீதிமன்ற தீர்ப்பு உள்ளது” என்கிறார்.
அதற்கு “உங்களது வார்த்தை தீர்ப்பல்ல ஏனெனில் எனக்கு உத்தரவு நகல் இல்லை” என்கிறார் எஸ்.பி. “அப்படி எனில் நீங்கள் நீதிமன்ற அவமதிப்பு வழக்கை சந்திக்க வேண்டியிருக்கும்”என்று திருமூர்த்தி சொல்லுகிறார். பின் வழக்கறிஞர் திருமூர்த்தி அதிகாலை இரண்டு மணிக்கு சென்னை அண்ணா சாலை தந்தி அலுவலகத்திலிருந்து தமிழக துணை முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழக அரசின் உள்துறை செயலாளர் மாலதி, கடலூர் மாவட்ட ஆட்சியர் சீதாரமன், கடலூர் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு “காவல்துறையினர் உயர்நீதிமன்ற உததரவை மீறுகிறார்கள். (தீர்ப்பாணை எண் ட்பில்யூ.பி 1012/2010)” என்று தந்தி கொடுக்கிறார்.
மீண்டும் சென்னையில்..
மறுநாள் 21 ஆம் தேதி காலை நீதிமன்றத்தில் நீதிமன்ற உத்தரவை மீறியது குறிப்பிடப்படுகிறது. நீதிமன்றத்தில் இது குறித்துக்கொள்ளப்படுகிறது. மீண்டும் 22 ஆம் தேதி மதியம் வழக்கு விசாரனைக்கு எடுத்துக்கொள்ளப்படுகிறது. (ஆனால் இந்த வழக்கு 08.02.10 அன்றுதான் விசாரணைக்கு வந்திருக்க வேண்டும். நீதிமன்ற உத்தரவை மீறி பல பணிகள் நடந்ததால் வழக்கு உடனே எடுத்துக்கொள்ளப்பட்டது)
22ம் தேதி வழக்கு வந்தபோது அரசு வழக்கறிஞர் ராஜாகலிபுல்லா “20 ஆம் தேதி காலையிலேயே பஞ்சாயத்து தலைவர் தர்மலிங்கம் தலைமையில் தலித் மக்களே விருப்பப்பட்டு சிலையை எடுத்து தலித் பகுதியில் வைத்துக்கொண்டதாக” கூறுகிறார். முற்றிலும் உண்மைக்குப் புறம்பான கூற்று இது. அப்போது அப்பகுதி தலித் மக்கள் கேட்டுக்கொண்டதற்கு இணங்க 5 போலிஸ் மட்டுமே பாதுகாப்புக்கு இருந்ததாக கூறினார். அதற்கு நீதிபதிகள் “ 20ம் தேதி காலையிலேயே சிலை அகற்றப்பட்டது என்றால் நாங்கள் இன்ஜக்ஷன் பிறப்பிக்கும்போது ஏன் இதைக் குறிப்பிடவில்லை, அப்போது நீங்களும் இருந்தீர்களே ஏன் சம்மந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரிவிக்கவில்லை” என்றனர். அதற்கு அவர் ஏதோ கூறி சமாளித்தார். நமது வழக்கறிஞர்கள் அங்கு நடந்ததைக் கூறினர். ஆதலால்...
ஏற்கனவே நாம் எதிர்வாதிகளாகக் குறிப்பிட்ட தமிழக உள்துறைச் செயலர், மாவட்ட ஆட்சியர், எஸ்.பி, தாசில்தார், ஆர்டிஓ, ஆய்வாளர் ஆகியோருடன் தற்போது சம்பவ இடத்தில் இருந்ததாகக் கூறப்படும் டி.எஸ்.பி, பஞ்சாயத்து தலைவர் தர்மலிங்கம், வார்டு உறுப்பினர் ரேனு, கிராம நிர்வாக அதிகாரி அசோகன் ஆகியோரையும் நீதிமன்றம் எதிர்வாதிகளாக இணைத்து உடனடியாக சிறப்புத் தூதுவர் மூலம் சம்மன் அனுப்ப வேண்டும் என்றும், 25 ஆம் தேதி அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிட்டனர்.
இதற்கிடையில் ஊர் மக்கள் ஆதரவுடன்தான் சிலை எடுக்கப்பட்டது என்ற அப்பட்டமான பொய்யை நீதிமன்றத்தில் அரசு தரப்பினர் கூறியதால் அதை அம்பலப்படுத்த முடிவு செய்து, தனித்தனியாக 247 ஊர் பொதுமக்களிடம் பிரமாணபத்திரம் விருதாசலத்தின் புகழ்பெற்ற வழக்கறிஞர் சந்திரசேகரன் உறுதிச்சான்றுடன் தயாரிக்கப்பட்டது. 25ம் தேதி தாக்கல் செய்வதற்காக 24 ஆம் தேதி இரவு சென்னைக்கு தனி பேருந்து மூலம் கிளம்பிய மக்கள் கூட்டத்தை விருதாசலம் நகரத்தை அடையும்முன்பே காவல் தூறையினர் தடுத்து நிறுத்தினர். சென்னைக்கு அபிடவுட் தாக்கல் செய்யச் சென்றால் உங்கள்மீது வழக்கு பதிவு செய்து சிறையில் தள்ளிவிடுவோம் என்று மிரட்டினர். அந்த மிரட்டல்களை வாலிபர் சங்க மாவட்ட நிர்வாகிகளும் வழக்கறிஞர் சந்திரசேகரனும் முறியடித்து அம்மக்களை சென்னைக்கு அழைத்து வருகின்றனர்.
25ம் தேதி வழக்கு வருகிறது. 247 பேர் அபிடவுட்டை தாக்கல் செய்த மக்கள் உள்ளூர் மக்கள் இல்லை என அவர்கள் எதிரிலேயே அரசு தரப்பு வழக்கறிஞர் மீண்டும் பொய்யான குற்றத்தை சுமத்தினார். நீதிபதிகள் அந்த சிறுபிள்ளைத்தனமான குற்றச்சாட்டை ஏற்றுக்கொள்ளவில்லை.
ஏற்கனவே நீதிமன்றம் ஆஜராகச் சொன்ன அனைத்து அதிகாரிகளும் அன்று இருந்தனர். தலித் மக்கள் ஆதரவுடன் சிலை அகற்றபட்டது என்பது பொய் என அன்றைய விசாரனையில் தெரிந்தது. காவல் துறையினர் செய்த அத்துமீறல்கள் நிரூபணமானது. அரசின் நிலையை தெரிவிக்க அரசு உள்துறைச் செயலர் சார்பில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்டனார்.
மீண்டும் 28 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. ஆனால் அதற்குள் ஒரு நகைச்சுவை சம்பவம் நடந்தது. அதாவது ஊரில் பஞ்சாயத்துக் கூட்டம் நடந்து, தீர்மானம் இயற்றித்தான் சிலை அகற்றப்பட்டதாக பொய்யான சான்று தயாரிக்கப்பட்டிருந்தது. ஆனால் நீதிமன்றம் அதை ஏற்றுக்கொள்ளவில்லை. அதுமட்டுமல்ல அந்த பஞ்சாயத்து தீர்மான நோட்டுகளை நீதிமன்றம் கைப்பற்றி வைத்துக்கொண்டது. கடலூர் மாவட்ட காவல்துறை அதிகாரிகளின் ரோந்து குறிப்பேட்டை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். அந்த கிராமத்தின் உண்மை நிலையைக் கண்டறிய நீதிமன்ற நிர்வாக பதிவாளர் விஜயன், வழக்கறிஞர்கள் செங்குட்டுவேல், காசிகுமார், திருமூர்த்தி (நமது வழக்கறிஞர்) ஆகியோர் கொண்ட குழு நீதிமன்றத்தால் அமைக்கப்பட்டது. பிப்ரவரி 1 ஆம் தேதி விசாரணைக் குழுவின் அறிக்கை நீதிமன்றத்தில் சமர்பிக்க உத்தரவிட்டனர். விசாரணைக் குழு விசாரணையை மேற்கொண்டபோது முன்னுக்கு பின் முரணான தகவல்களை சிலை எதிர்ப்பாளர்கள் கூறினர்.
ஆனால் அரசு தரப்பிலும், சிலை எதிர்ப்பாளர்கள் தரப்பிலும் கொஞ்சம் கொஞ்சமாய் அவர்களது வாதம் பொய் என அம்பலப்பட துவங்கியதும் வேறு வழி இல்லாமல் அரசு இறங்கி வந்தது. பிப்ரவரி ஒன்றாம் தேதி விசாரணைக் குழுவின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அன்று அரசின் தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் அரசுத் தரப்பில் ஆஜரானார். அவர் “தேசத்தின் சிறந்த தலைவர் சிலையை அவமதித்தது தவறு, நீதிமன்ற உத்தரவுக்கு பிறகும் அதை மீறி சிலையை அகற்றியதற்காக தமிழக அரசின் சார்பில் மன்னிப்பை கேட்டுக்கொள்கிறோம்” என்றார். நீதிமன்றம் உத்தரவு இட்டால் மீண்டும் சிலையை ஊரின் மத்தியில் அதே இடத்தில் வைக்கிறோம் என்றார். ஆனால் இஸ்லாமியத் தரப்பு சார்பில் பழைய இடத்தில் வைத்தால் சட்டம் ஒழுங்கு பிரச்சனை ஏற்படும் என்றனர். ஆனால் நீதிமன்றம் இதை ஏற்றுக்கொள்ளவில்லை. மகாராஸ்டிர மாநிலத்தில் மாமேதை அம்பேத்கர் பிறந்த மற்றும் மறைந்த நாள் விழாக்களில் லட்சக்கணக்கில் மக்கள் கூடும்போதே பிரச்சனைகள் வருவதில்லை என்பதையும் சுட்டிக்காட்டினர்.
மீண்டும் பிப்ரவரி 8 ஆம் தேதி வழக்கு வந்தது. அன்று மேலும் ஒரு வழக்கறிஞர் மூலம் இஸ்லாமியத் தரப்பின் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. அதையும் நீதிமன்றம் நிராகரித்தது. மீண்டும் மீண்டும் இஸ்லாமிய தரப்பில் அவர்கள் தடுக்கக் காரணம் விடுதலை சிறுத்தைகள் அமைப்பின் தலைவர் தொல்.திருமாவளவன் எம்.பி சிலையை ஊரின் பொது பகுதியிலிருந்து தலித் பகுதிக்கே மாற்றிக்கொள்ள தனது கையொப்பமிட்ட கடிதத்தை கொடுத்ததுதான். ஆனால் இதை தலித் மக்கள் யாரும் ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை அம்மக்கள் நடத்திய போரட்டங்களும், நீதிமன்றத்திற்கே வந்து சாட்சி சொன்னதும் நிரூபித்ததால் கடிததத்தை நீதிமன்றம் கண்டுகொள்ளவில்லை. இறுதியாக பிப்ரவரி 11ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என்றனர்.
2010 பிப்ரவரி 11 ஆம் தேதி முடிந்த போது...
ஆடர்... ஆடர்.. ஆடர்.. நீதிபதிகளின் பாரம்பரியமான வார்த்தைகள் சென்னை உயர் நீதிமன்றத்தில் எதிரொலித்தபோது தலைமை நீதிபதி எச்.எல்.கோகலே, நீதிபதி கே.கே சசிதரன் ஆகியோர் தங்களது அமர்வின் தீர்ப்பை வாசிக்கத் துவங்கினர். “இனி தமிழ்நாட்டில் தலைவர்கள் சிலைகள், நினைவு சின்னங்கள் போன்றவற்றை நிறுவ வேண்டும் என்று சொன்னால் அரசிடம் உரிய அனுமதி பெற வேண்டும். ஏற்கனவே இருக்கும் சிலைகளை அகற்ற வேண்டும் என்று சொன்னாலும் அப்படியே. சிலைகளை யார் வைக்கிறார்களோ அவர்களே பொறுப்பாகுவார்கள். இந்த வழக்கின் மனுதாரர் அமிர்தலிங்கத்திற்கு (இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தின் கிளை செயலாளர்) வழக்கு இழப்பீட்டு தொகை ரூபாய் 20,000ஐ அரசு கொடுக்க வேண்டும். அப்பணத்தை டி.எஸ்.பி. தாசில்தார், இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட, அதிகாரிகள் தரப்பில் தவறு செய்தவர்களின் சம்பளத்திலிருந்து அரசு பிடித்தம் செய்து கொள்ளலாம். கடலூர் மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தலைமையில் 2010 பிப்ரவரி 28க்குள் எங்கிருந்து அம்பேத்கர் சிலை எடுக்கப்பட்டதோ அங்கேயே நிறுவப்பட வேண்டும்”என இந்த நீதிமன்றம் தீர்ப்பளிக்கிறது.
ஒருவகையில் இது வரலாற்றுச் சிறப்புமிக்க தீர்ப்புதான். கடுமையான அடக்குமுறைகளை, மிரட்டல்களை, சட்ட நுணுக்கங்களை, ஏமாற்றுகளை, துரோகங்களை மீறி எளிய கிராமத்து மனிதர்களின் வெற்றியை முறசரைந்த தீர்ப்புதான். இது மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் போராடி பெற்ற தீர்ப்பு இது.
எனவே...
இந்த தேசத்தின் மகத்தான தலைவரின் சிலைக்கு மாலை அணிவிக்கக்கூட தடை இருந்த ஊரில் அந்த தடை உடைக்கப்பட்டிருக்கிறது. தலித் தலைவர்களாக தங்களை அறிவித்து கொள்பவர்கள் கூட அவரின் இடம் ஒடுக்கப்பட்ட மக்களின் இருப்பிடமே என சொல்லும் சோகமும் நடக்கிறது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் 2009 டிசம்பர் 25 ஆம் தேதி வர்க்கப் போராட்டத்தின் ரத்தசாட்சிகளான வெண்மணி தியாகிகள் தினத்தில் தமிழகம் முழுவதும் தீண்டாமைக்கு எதிரான நேரடி நடவடிக்கைப் போராட்டத்தை நடத்தியது. கிட்டத்தட்ட 20 மாவட்டங்களில் இந்தப் போராட்டம் வெற்றிகரமாக நடந்தது. இன்னும் பல்லாயிரம் கிராமங்களில் தீண்டாமைக் கொடுமைகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கிறது, அதை எதிர்த்து நடக்கும் போராட்டங்களைப் போல.
(திருமாவளவன் எழுதிய கடிதம்)
Sunday, November 8, 2009
பேராண்மை: சமூகநீதியின் வெற்றி!
தமிழ் அல்லது இந்திய சினிமாக்களைப் பொறுத்தவரை காடுகளும் மலைகளும், மலை சார்ந்த பகுதியும் ஒன்று நாயகன் நாயகி காதல் காட்சிக்குப் பயன்படும் அல்லது, திகில் காட்சி, சண்டைக் காட்சிகளுக்குப் பயன்படும். அவ்வாறே, மலைவாசி பூர்வகுடி மக்கள் என்போர் "ஜும்பாலே.. ஜும்பாலே.." பாடியபடி நடனமாடி நாயகன் நாயகிக்கு மாலை சூடவோ, அல்லது நகைப்புக்குரிய மனிதர்களாக காட்டவோ பயன்படுவர்.
பேராண்மை' படமும், காட்டையும், காட்டு மக்களையும் சுற்றித்தான் எடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இதுவரை தமிழ்ப் படங்கள் காணாத நாயகன், காணாத இடங்கள் என ஒவ்வொன்றிலும் வேறுபட்டு நிற்கிறது படம். திரைத் தொழில்நுட்பமும், ஒடுக்கப்பட்ட மக்கள் மீதான சமூக அக்கறையும் கொண்ட 'மக்கள் இயக்குநர்' ஜனநாதனின் இயக்கத்தில் 'ஜெயம்' ரவி நடித்து வெளிவந்திருக்கும் படம் தான் 'பேராண்மை'.
என்.சி.சி. பயிற்சிக்காக மலைப்பகுதிக்கு வருகிறார்கள் கல்லூரி மாணவிகள். அவர்களின் பேராசிரியராக ஊர்வசி. அக்காட்டுப் பகுதிக்கு ரேஞ்சராக கணபதி ராம் என்ற கதாபாத்திரத்தில் பொன்வண்ணன். 2000 ஏக்கர் காட்டுக்கு பொறுப்பாளராகவும், மாணவிகளுக்கு பயிற்சி அளிப்பவராகவும் மலைவாழ் சமூகத்திலிருந்து படித்து முன்னேறி பதவிக்கு வந்திருக்கும் இளைஞர் துருவனாக ஜெயம் ரவி. அலுவலகப் பணியாளராக வடிவேலு.
மாணவிகள் பயிற்சிக்கு வரும் வழியில், மலை வாழ் மக்களுடன், கோவணம் தரித்தபடி எருமை மாட்டுக்கு பிரசவம் பார்க்கும் துருவனைப் பார்க்கிறார்கள். பின்னர் அவரே தங்களுக்கு பயிற்சியாளராக வருவது கண்டு 'இந்தக் காட்டுவாசியா நமக்கு கற்றுத் தருவது? ரிசர்வேசன் கோட்டாவில படிச்சுட்டு வந்த இவனுக்கு என்ன தெரியும்?' என்று வெறுப்புக் கொள்கிறார்கள் அதில் சில மாணவிகள்.
எப்படியேனும் துருவனை தங்களுக்கு பயிற்சியளிப்பதில் இருந்து மாற்றிவிட வேண்டும்' என்று அய்ந்து மாணவிகள் புகார் அளிக்கவும், பழி சுமத்தவும் செய்கிறார்கள். ஏற்கெனவே துருவனின் மீது ஜாதி ரீதியாக வெறுப்பும் ஏளனமும் கொண்டிருக்கும் கணபதிராம் அதனைப் பயன்படுத்தி துருவனை மட்டம் தட்டவும், தண்டனை வழங்கவும் முன்வருகிறார். எதையும் பொறுமையுடன் சமாளிக்கும் துருவன், முதல் கட்டப் பயிற்சி முடித்து காட்டுக்குள் செல்லும் பயிற்சிக்காக மாணவிகளைத் தேர்ந்தெடுக்கும் போது, சரியாகப் பயிற்சி எடுக்காத அந்த அய்ந்து மாணவிகளுக்குத் தான் பயிற்சி தேவை என்று அவர்களையே தேர்ந்தெடுக்கிறார்.
அதே வேளையில், இந்திய விண்வெளி ஆராய்ச்சித் துறை இயற்கை வேளாண்மைக்கு உதவுவதற்காக பசுமை -1 என்ற ராக்கெட்டை விண்வெளியில் செலுத்த இருக்கிறது. இயல்பாகவே குறும்புத் தனமும், துருவன் மேல் அசூயையும் கொண்டுள்ள மாணவிகள் (துருவன் மீது நேசப் பார்வை வீசும் அஜிதா தவிர), துருவனின் பேச்சைக் கேட்காமல் செயல்பட்டதில், வந்த வாகனத்தையும் இழந்து, மாலையே பயிற்சியகத்திற்கு திரும்ப முடியாதபடி நடுக்காட்டில் மாட்டிக் கொள்கிறார்கள். அவ்விரவில், மனித நடமாட்டமற்ற காட்டுப்பகுதியில், இரண்டு வெள்ளைக்காரர்கள் உலாவுவதைப் பார்க்கும் ஒரு மாணவி அதுகுறித்து துருவனிடம் சொல்ல, அவர்கள் இருவரல்ல... 16 பேர் இருப்பதைக் காண்கிறார்கள். அவர்களின் திட்டம் ராக்கெட் ஏவுவதைத் தடுப்பதாக இருக்கும் என்பதை ஊகிக்கும் துருவன், மாணவிகள் அய்வரின் துணையுடன் அதை முறியடிக்கத் துணிகிறார்.
உடனடித் தொடர்போ, தகவலோ இன்றி, காட்டுக்குள் சென்ற துருவனும் மாணவியரும் திரும்பி வராததால், துருவன் மீது புகாரை வலிந்து பெற்றுக் கொண்டு, படையுடன் காட்டுக்குள் நுழைகிறார் கணபதிராம். மழைவாழ் மக்களின் இருப்பிடத்திலிருந்து அவர்களை விரட்டியும், தகவல் சொல்ல வந்து சேற்றில் சிக்கி இறந்து போன மாணவி அஜிதாவின் பிணத்தைக் காட்டி, துருவனை சுடுவதற்கு அனுமதி வாங்கியும் தனது அதிகாரத்தைப் பயன்படுத்துகிறார்.
மறுபுறம் நான்கு மாணவிகளுடன் தன்னால் இயன்ற அளவு, சர்வதேச கூலிப் படையின் சதியைத் தடுத்து நிறுத்த முயல்கிறார் துருவன். இரண்டு மாணவிகளின் உயிரைப் பலி கொடுத்து, தங்கள் உயிரைப் பணயம் வைத்து நாட்டுக்காக துருவன் உள்ளிட்டோர் போரிடுகிறார்கள்; முடிவில் அவர்கள் முயற்சி வெற்றிபெறுகிறது.
கணபதிராம் வீரதீரச் செயல்களுக்கான விருது பெறுகிறார். அடுத்த கல்லூரி மாணவிகளின் பயிற்சியைத் தொடங்குகிறார் துருவன்.
ஒரு வேளை இந்தக் கரு விஜயகாந்த் கையிலோ, மற்ற இயக்குநர்கள் கையிலோ கிடைத்திருந்தால், சர்வதேச கூலிப்படை- பாகிஸ்தான் சதியாகியிருக்கும். நாயகன் மீதான வெறுப்பு கல்வி அறிவற்ற ஏழை என்ற அளவில் மொன்னையாக காட்டப்பட்டிருக்கும். நாயகிகளின் கனவுப் பாட்டு இரண்டு மூன்றாவது இருந்திருக்கும். அய்யய்யோ... இன்னும் என்னவெல்லாம் நடந்திருக்குமோ நினைக்கவே பயமாக இருக்கிறது.
சரி, ஒரு திரைப்படம் என்ற அளவில், இயக்குநர், ஒளிப்பதிவாளர், கலை இயக்குநர் உள்ளிட்ட அனைத்துக் கலைஞர்களின் பணியும் வியக்க வைக்கிறது. தமிழ் சினிமாவை அடுத்த கட்டத்திற்கு நகர்த்துவோம் என்று அனைவரும் வாயில் படம் எடுத்துக் கொண்டிருக்க, உண்மையில் ஒரு ஹாலிவுட் படத்திற்கு இணையான வியத்தகு காட்சிகளோடு, அதை சத்தமில்லாமல் செய்து காட்டியிருக்கிறார் இயக்குநர் ஜனநாதன்.
பொத்தாம் பொதுவான பார்வையில்லை. எல்லா ஆயுதத்தையும், எதற்கென்றே தெரியா மல் பயன்படுத்தும் படங்கள் மத்தியில், ஒவ்வொரு ஆயுதத்தையும் எதற்கு இது, எப்படிப் பயன்படுத்துவது என்பது வரை சொல்லிக் காட்டுவது ஒன்றே மற்றவற்றிலிருந்து இப்படத்தை வேறுபடுத்திக் காட்டிவிடும்.
ஆனால் அவற்றையெல்லாம் தாண்டி என்ன இருக்கிறது இந்தப் படத்தில்? நிச்சயம் இருக்கிறது.
உயிரியல் ஆயுதங்களைப் பரிசோதிக்கும் கூடமாக மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் எப்படிப் பயன்படுத்தப்படுகிறார்கள் என்பதை ஈ' படத்தில் சொன்னது போல, வளரும் நாடுகளை ஒழிக்க நினைக்கும் சர்வதேச முதலாளித்துவத்தை உரித்துக் காட்டும் சர்வதேச அரசியல் குறித்த சிந்தனை இருக்கிறது இந்தப் படத்தில்!
ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியல் இருக்கிறது இந்தப்படத்தில். ஆம். இரண்டாயிரம், மூவாயிரம் ஆண்டுகளாக இயற்கையோடு வாழ்ந்துவரும் மலைவாழ் மக்கள் மீது, மண்ணின் மைந்தர்கள் மீது வந்தேறிகள் நடத்தும் வன்முறை பதிவாகியிருக்கிறது இந்தப் படத்தில்!
அடக்கி வைக்கப்பட்ட அறிவை வெளிக்கொண்டு வந்தாலும், அதன் மீது தங்கள் அதிகாரத்தைப் பாய்ச்சி நசுக்க நினைக்கும் அதிகார மனநோயாளிகளின் ஆரிய சர்வாதிகாரத்தின் உண்மை முகம் வெளிச்சமிடப்படுகிறது இந்தப் படத்தில்!
உழைப்பைச் சுரண்டிச் சுரண்டியே உயர்ந்து வந்த உலுத்தர்களின் அடையாளம் காட்டப்படுகிறது இந்தப் படத்தில்!
"செருப்புத் தைக்கிறவன் பிள்ளை செருப்பு தான் தைக்கணுமா? மலம் எடுக்கிறவன் பிள்ளை மலம்தான் எடுக்கணுமா? நாங்கள் லாம் படிச்சு அதிகாரியா வரக்கூடாதா?" என்று காலம் காலமாய் தேங்கி நிற்கும் கேள்வி உரத்து கேட்கப்படுகிறது இந்தப் படத்தில்!
ஒரு படத்தில் இத்தனையுமா? ஆம்.. இருக்கிறது... இன்னும் இருக்கிறது!
காரணம்... இதையெல்லாம் சொல்லத் தெரியும் என்பதையும், பன்னீர் செல்வம்' என்று பெயரிட்டு கறுப்பான ஆளைக்காட்டி லஞ்சப் பேர்வழி யாகவும், அங்கவை, சங்கவை என்று கறுப்பான மகளிரை நகைப்பிற்கிடமாகவும் காட்டும் அரசியல் சுஜாதாக்களுக்கு தெரியுமென்றால்...
கறுப்புச் சட்டை அணிவித்து ரவுடி அரசியல்வாதி என்று பாரதிராஜாவை நடிக்க வைக்கும் அரசியல் மணிரத்னங்களுக்கு தெரியுமென்றால்... அதே வழியில் 'டாக்டர் ராம கிருஷ்ணன்' என்று பன்னாட்டு மக்கள் விரோத அறிவியல் ரவுடிகளையும், 'கணபதி ராம்' என்று ஜாதி வெறியர்களையும் அடையாளம் காட்டும் அரசியல் எங்களுக்கும் தெரியும் என்று புரிய வைக்கப்பட்டிருக்கிறது இந்தப் படத்தில்!
"அகமும் புறமும் வென்றவன்' - இது தான் பேராண்மைக்கு ஜனநாதன் தந்த விளக்கம்" என்று கவிப்பேரரசு வைரமுத்து சொன்னார். அப்படி ஒரு பாத்திரப் படைப்புதான் துருவன். 'நிர்வாணமாய் வரச் சொன்னான்' என்று திட்டமிட்டு குற்றம் சாட்டி, தண்டனை பெற்றுத் தரும்போதும் பொறுமை காத்து, தண்டனையை ஏற்றுக் கொள்ளும் துருவன், பின்னொரு கணத்தில் சொல்வார், "எங்க மக்களுக்கு தலைப்பிரசவம் பார்க்கிறதுக்கு என்னைதான் கூப்பிடுவாங்க.. என்னுடைய பார்வையில் நிர்வாணம்கிறதே வேற".
"அய்ந்து பெண்களை தனியாய் ஒரு ஆணுடன் அனுப்பும்போது நம்பிக்கையாய் அனுப்ப துருவனை விட்டால் யார் இருக்கிறார்" என்று கல்லூரிப் பேராசிரியையின் நம்பிக்கையும், துருவனை 'ரேப்பிஸ்ட்'டாக சித்தரிக்க முயலும் கணபதிராமிடம் "கற்பழிப்புங்கிறதே எங்க இனத்தில கிடையாது சார்" என்று பதறும் வடிவேலுவின் தவிப்பும் அகத்தை வென்ற துருவனின் பேராண்மையைப் படம் பிடிக்கின்றன.
மாணவிகளின் குறும்புத் தனத்தைக் காட்டவும், இன்றைய இளைய தலைமுறை யின் போக்கைக் காட்டவும் இயக்குநர் பயன்படுத்தியிருக்கும் இரட்டை அர்த்த வசனங்களைப் புரிந்துகொள்ள முடிகிறது. பொறுத்துக் கொள்ள முடியவில்லை; தவிர்த்திருக்கலாம்.
மலைவாழ் மக்கள் மீதுதான் இத்தகைய பாலியல் வன்கொடுமைகள் நிகழ்த்தப்பட்டிருக்கின்றன என்பது வரலாறு நமக்குக் காட்டும் உண்மை. பூர்வகுடி மக்களை, அவர்களின் மண்ணிலிருந்து விரட்ட அதிகார வர்க்கம் எப்படியெல்லாம் நடந்துகொண்டிருக்கிறது என்பதை ஒரு காட்சியில் உணர்த்தி விடுகிறார். துருவன் மீது பழிபோட்டு, அவனைத் தேடுகிறோம் என்று பழங்குடி மக்களை ஊரைக் காலி செய்யச் சொல்லும்போது அதிகாரம் நிகழ்த்துகிற வன்முறை கோபத்தையும், கண்ணீரையும் ஒருங்கே வரவழைக்கிறது. 'நீங்கள்லாம் படிக்க ஆரம்பிச்சிட்டா நாங்க என்னடா பண்றது?' என்று புத்தகங்களைத் தூக்கிப் போட்டு எரிக்கும்போது பார்ப்பனீயத்தின் விஷ நாக்குகள் எவ்வளவு தூரம் நீண்டிருக்கிறது என்பது புரியும்.
"படிக்கலைன்னா தான் அடிப்பாங்க... இவங்க படிச்சா அடிக்கிறாங்க" என்றபடி கரும்பலகையைக் காப்பாற்றும் குழந்தைகளின் வசனம், ஏதோ சாதாரணமானதல்ல... முதல் தலைமுறையார் படிக்க ஆவல் கொண்டு பள்ளிக்குப் போன ஒவ்வொரு ஒடுக்கப்பட்ட இனக் குழந்தையும் அனுபவித்த கொடுமை யின் வெளிப்பாடு. அத்தனை வன்முறையையும் நிகழ்த்திவிட்டு, "இப்போ தெரியுதாடா 'அரசு, அரசாங்கம், அதிகாரம்'ன்னா என்னன்னு?" என்று கொக்கரிக்கும்போதும், ஜாதியை வைத்து இழிவு செய்யும் போதும், துருவனின் வெற்றியத் திருடி கணபதிராம் விருது வாங்கும்போதும் திரையரங்கில் மக்களின் கோபத்தின் வெப்பத்தை உணர முடிகிறது. ஆங்காங்கே விளையாடியிருக்கும் சென்சாரின் கத்திரிக்கு நன்றி சொல்ல வேண்டும். காரணத்தை பெட்டிச் செய்தியில் காண்க.
ஒவ்வொரு காட்சியிலும், ஏதாவதொன்றச் சொல்லிவிடும் தவிப்பு இருக்கிறது இயக்குநரிடம். ஆனால் பிரச்சாரம் என்ற பாணியிலன்றி, வெகு இயல்பாகச் சொல்லிச் செல்கிறார். பொதுவுடைமையின் அடிப்படையை இவ்வளவு எளிதாகச் சொல்லிவிட முடியுமா? உழைப்புதான் அத்தனைக்கும் காரணம் என்பதை மிகமிக எளிதாக அரசியல் பொருளாதாரம் என்று வகுப்பாகவே எடுத்துவிடுகிறார். (போனஸ், படி உயர்வு பிரச்சினைகளைத் தாண்டி கம்யூனிஸ்டுகள் கூட இத்தனை ஆண்டுகளில் இதைச் சொல்லியிருப்பார்களா என்பது சந்தேகமே!)
"தமிழனோட வீரத்தை உலகமே பார்த்து வியக்குது" என்ற வசனத்தின் அர்த்தத்தை விளங்கிக் கொண்டு திரையரங்கில் ஆரவாரம் கேட்கிறது. இந்திய நாட்டைக் காப்போம் என்ற உறுதியெல்லாம், இங்கு வாழும் உழைக்கும் மக்களைக் குறிக்கிறது என்பதையும், இந்தியா வல்லரசாவதெல்லாம், விவசா யத்தை நம்பி வாழும் மக்களை விட்டுவிட்டு நடக்காது என்பதையும் உணர்த்துகிறார். இயற்கை வேளாண்மை, மலட்டு விதைகள், பசுமைக்காக ராக்கெட், உழைக்கும் மக்களின் சர்வாதிகாரம் என்று இந்த வார்த்தைகளை யெல்லாம் கேட்டேயிராத இளைஞர்களின் காதுகளில் சங்காக ஊதி சர்வதேச அரசியலைப் படிக்கச் சொல்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து எழுதிய "காட்டுப் புலி அடிச்சு" பாடலின் அந்தக் கடவுள் பொறக்கும் முன்னே இந்த பூமிக்கு வந்தவுக' உள்பட வரிகள் ஒவ்வொன் றும் குறிப்பிடத்தக்கவை.
"கிராமப் பெண்களுக்கு மாராப்பை விலக்கி விலக்கியே காலம் போச்சு; நகரத்துப் பெண்களுக்கு முடியை ஒதுக்கிவிட்டே காலம் போச்சு" என்று தந்தை பெரியாரின் குரல் தான் துருவன் வழி கேட்கிறது. காட்டின் ரகசியத்தை, போரியல் நுணுக்கங்களை சொல்லி வரும் போதும், கன்னிவெடி குறித்து மனிதநேயர் களின் கருத்தை விதைக்கிறார். தவறான கருத்து எங்கேயும் வந்துவிடக்கூடாது என்பதில் இயக்குநரின் அக்கறை புலப்படுகிறது. இன்னும் எடுத்துச்சொல்ல ஏராளம் இருக்கிறது.. பக்கம்தான் இல்லை!
இழிவுபடுத்தப்படும்போதெல்லாம் துருவன் காட்டும் பொறுமையை யாரேனும் கேள்விக்குள்ளாக்கலாம். காலமெல்லாம் தன் பிரச்சாரத்திற்கு வந்த எதிர்ப்புகளையும், தனக்கு வந்த இழிவுகளையும் பொறுமையாகக் கையாண்ட தந்தை பெரியாரின் பொது வாழ்க்கை முறையை எண்ணிப்பார்த்தால் துருவனின் நியாய புலப்படும். ஆனால், "ரிசர்வேசன் கோட்டாவில படிச்சு வந்த உங்களுக்கு என்ன தெரியும்?னு நினைச்சுட்டோம் சார். எங்களை மன்னிச்சுடுங்க" என்று சொல்ல வைக்கிறாரே அங்குதான் இருக்கிறது முழுமையான வெற்றி!
இடஒதுக்கீட்டைக் கொச்சைப்படுத்தியும், திரித்தும், விளங்காமலும் படங்கள் வெளிவந்துள்ள சூழலில் இடஒதுக்கீட்டின் பயனை, தகுதி-திறமை என்ற மாய்மால வார்த்தைகளின் பின் ஒளிந்திருக்கும் வன்மத்தை எடுத்துக் காட்டி வெளிவந்திருக்கும் பேராண்மை படத்தை பார்ப்பதும், பரப்புவதும் சமூகநீதியிலும், ஒடுக்கப்பட்டோர் உரிமையிலும் அக்கறையுள்ள ஒவ்வொருவரின் கடமையாகும்.
-சமா இளவரசன்
Tuesday, July 21, 2009
தமிழ் படிக்க தெரியுமா?
(எங்க.. இத படிங்க பாப்போம்.)
உகங்ளால் ப்இ பகக்த்தை பக்டிக முந்டிதால், உகங்ளை பாட்ராடியே கஆ வேடுண்ம்.100குக் 55 மகக்ளால் மடுட்மே இபப்டி பக்டிக முயுடிம். எனான்ல் நபம்ப் முயடில்விலை, எபப்டி தஇ பக்டிறேகின் என்று? ஆசச்ரிமாயன சதிக்க் கொடண்து மதனினின் ளைமூ. ஒரு ஆய்ராயிசில்,கேபிம்ட்ரிஜ் பகல்க்லைழககம் இந்த உமைண்யை கடுண்பிப்டித்ள்துளது. எத்ழுக்துகள் எந்த வசையிரில் உளள்து எபன்து முகிக்மியல்லை. முதல் எத்ழுதும் கசிடையாக உள்ள எத்துழும், சயாரின இத்டதில் உளள்தா எபன்தை மடுட்ம் பாத்ர்தால் போதும். எனாதல் எறான்ல், மதனினின் மூளை முதல் எத்ழுயுதைம், கைடசி எத்ழுயுதைம் மடுட்மே பக்டிகும்.பாக்கி உள்ள எத்தழுதுகக்ளை தாகனாவே உவாள்ங்கி கொளுள்ம். ஆச்ரிசயகமால்யிலை? ம், நான் எபொப்துழும் நிதனைதுண்டு எத்ழுதுகக்ள் மிவுகம் முகிக்யம் என்று. உகங்ாளல் பக்டிக முந்தாடில் மற்ற பவதிர்ளுகக்கும், பந்ரிதுயுரைகங்ள்!!
ஒக்கந்து யோசிப்பாய்ங்கலோ..., அப்படின்னு சொல்லப்படாது..............







